கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடித்த லவ் டுடே திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தாலும், சிறிய பட்ஜெட்டில் ஒரு சாதாரண படமாகத்தான் வெளியானது.

இவான கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்றைய சூழலில் இளம் காதலர்கள் இருவர் தங்களது மொபைல் போனை ஒரே ஒரு நாள் மட்டும் ஆளுக்காள் மாற்றி வைத்து இருந்தால் அதன்பிறகு அவர்கள் காதலில் என்ன நடக்கும் என்கிற சுவாரசியமான கற்பனையை விறுவிறுப்பாக ஜாலியான படமாக இயக்கி நடித்திருந்தார் பிரதீப் ரங்கநாதன்.

இந்த படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியைக் பெற்று வசூலையும் வாரி குவித்தது. இந்த நிலையில் இந்த படத்தை தெலுங்கிலும் வெளியிடுவதற்கு விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டினர். இதை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு இந்த படம் வெளியாகி உள்ளது.

தமிழில் கிடைத்த அதே ஆரவாரமான வரவேற்பு தெலுங்கு இளைஞர்களிடமும் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. படம் பார்த்துவிட்டு தெலுங்கு ரசிகர்கள் பலர் இப்படி ஒரு படத்தை பார்த்ததில்லை என பாராட்டியதுடன் தியேட்டருக்கு படம் பார்க்க வந்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை அலேக்காக தூக்கி பாராட்டி கொண்டாடி விட்டனர். அநேகமாக இந்தப் படம் இன்னும் சில மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.