சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான கலகத்தலைவன் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் பட வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க பஹத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். மிக முக்கியமான காமெடி கலந்த சென்டிமென்ட் கதாபாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பில் நடித்தபோது சில காட்சிகள் சரியாக வராவிட்டால் அதை மறுநாள் எடுத்துக் கொள்ளலாம் என உதயநிதியிடம் கூறுவாராம் மாரிசெல்வராஜ்.
கூடவே நடித்த நடிகர் பகத் பாசிலும், ஆமாம் நாளை இதே காட்சியை நாம் வேறு விதமாக எடுப்போம் என்று அவருக்கு ஆதரவாக பேசுவாராம். அந்த வகையில் இந்த இருவருக்கும் நன்றாக செட் ஆகிவிட்டது என்று உதயநிதி ஸ்டாலின் தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
ஆனால் நாங்கள் இத்தனை பேர் நடித்தாலும் எங்கள் அனைவரையும் தூக்கி சாப்பிடும் விதமாக வடிவேலுவின் நடிப்பு இந்த படத்தில் இருக்கும்.. நிச்சயமாக அவருக்கு இந்த படத்தில் தேசிய விருது கிடைக்கும் என உறுதியாக கூறுகிறார் உதயநிதி ஸ்டாலின் .