தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் சிரஞ்சீவி கடந்த சில வருடங்களாக திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கி வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அந்தவகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஆச்சார்யா, சமீபத்தில் வெளியான காட்பாதர் என தொடர்ந்து அவரது படங்கள் திரைக்கு வந்தவண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் போலா சங்கர், வால்டர் வீரைய்யா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இதில் வால்டர் வீரைய்யா என்கிற படத்தை இயக்குநர் பாபி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் சிரஞ்சீவியின் மீதான தனது அபிமானத்தை வெளிப்படுத்தும் விதமாக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பாஸ் பார்ட்டி பார்த்து என்கிற பாடலை தானே எழுதி இசையமைத்து பாடியுள்ளார். இந்த பாடல் ராப் இசை பாணியில் உருவாகி உள்ளது.
இந்தப் பாடலுக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி தன்னுடைய அற்புதமான நடன அசைவுகளால், பாடலை மேலும் அழகு சேர்த்திருக்கிறார். அவருடைய தோற்றமும், நடன அசைவும் வெகுஜன மக்களின் ரசனைக்குரியவை.

இந்தப் பாடலில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியுடன் இணைந்து நடனமாடியிருக்கும் நடிகை ஊர்வசி ரௌத்லாவும், அவருக்கு இணையாக நடனமாடி ரசிகர்களை கவர்கிறார். இந்தப் பாடலுக்கான நடனத்தை, நடன இயக்குநர் சேகர் பிரத்யேகமாக வடிவமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியுடன், ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். கமர்ஷியல் அம்சங்களுடன் மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார்.