ராகவா லாரன்ஸ் தற்போது பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி-2 மற்றும் ருத்ரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் இதில் ருத்ரன் படத்தை தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கிவருகிறார். இந்த நிலையில் கடந்த வருடம் இதே ஆடுகளம் கதிரேசன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அதிகாரம் என்கிற படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த படத்திற்கான கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுத, இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குவதாக முடிவானது. அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியுள்ள நிலையிலும், இந்த படம் குறித்த புதிய அறிவிப்புகளை அல்லது படப்பிடிப்பு துவங்கும் செய்திகளை வெளியாகவில்லை என்பதால் இந்த படம் கைவிடப்பட்டது என கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில் இந்த படம் கைவிடப்படவில்லை என படக்குழுவினர் கூட்டாக சேர்ந்து உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது ராகவா லாரன்ஸ் தான் நடித்து வரும் படங்களை முடித்த பின்பும் அதேபோன்று துரைசெந்தில்குமார் தற்போது நயன்தாராவை வைத்து இயக்கும் படத்தை முடித்ததும் இந்த படத்திற்கான வேலைகள் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.















