கார்த்தி நடிப்பில் தீபாவளி வெளியீடாக ரிலீசான சர்தார் திரைப்படத்தை தயாரித்தவர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார். அதைத்தொடர்ந்து தற்போது சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள காரி என்கிற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். மலையாள நடிகை பார்வதி அருண் கதாநாயகியாக நடிக்க, வில்லனாக ஜேடி சக்கரவர்த்தி நடித்துள்ளார். படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் இந்த படம் திடீரென ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. காரணம் இந்த படத்தில் மிக முக்கியமான மையப்பொருளாக ஜல்லிக்கட்டு விளையாட்டு கையாளப்பட்டுள்ளது. இன்று உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடை கோரிய வழக்கின் மீது விசாரணை துவங்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த காரி திரைப்படம், விரைவில் வெளியாக இருப்பதால் அது குறித்து ரசிகர்களிடம் இயல்பாகவே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்து சில விஷயங்களை, பத்திரிகையாளர்களை அழைத்து பகிர்ந்து கொண்டனர் படக்குழுவினர்.

அதில் இயக்குனர் ஹேமந்த் பேசும்போது, “இந்த படம் வெறும் ஜல்லிக்கட்டை மட்டுமே மையப்படுத்தி அல்லாமல் மூன்று வர்க்கங்களை சேர்ந்த மூன்று மனிதர்களின் வாழ்வியலையும் அவை எப்படி ஒரே புள்ளியில் இணைகின்றன என்பதையும் அவற்றை இணைக்கும் மையப்புள்ளியாக எப்படி ஜல்லிக்கட்டு இருக்கிறது என்பதையும் இந்த படத்தில் கூறியுள்ளோம்” என்றார்.

ஜல்லிக்கட்டுக்கான தடை குறித்த விசாரணை நீதிமன்றத்தில் இருப்பதால் அது பற்றி விரிவாக பேச முடியாது என்று கூறிய சசிகுமார், ஜல்லிக்கட்டை யாராலும் அழிக்க முடியாது, நிச்சயம் நல்லவிதமான தீர்ப்பு வரும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்.. இந்த விஷயத்தில் தமிழக அரசு சரியான பாதையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது” என்று கூறினார்.
படத்தின் தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் பேசும்போது, “ஜல்லிக்கட்டை மிருகவதை என்கிற பெயரில் தடை செய்ய நினைப்பவர்கள் குதிரைப்பந்தயத்தை மட்டும் ஏன் கண்டுகொள்ளாமல் விடுகிறார்கள்..? அது மிருகவதை இல்லையா ? அது அவர்கள் கண்களுக்கு தெரியவில்லையா என்று என்னிடம் கேட்கிறார்கள். மிகவும் எளிமையாக சொன்னால் குதிரைப்பந்தயம் பணக்காரர்களின் விளையாட்டு, ஜல்லிக்கட்டு ஏழைகளின் விளையாட்டு.. இதுதான் வித்தியாசம்” என்று ஒரே போடாக போட்டார்