தமிழ் சினிமாவில் தற்போதுள்ள வாரிசு நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அதர்வா முரளி, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக். ஆகிய மூவர்தான். காரணம் இவர்கள் மூவரும் ஒரே காலகட்டத்தில் அறிமுகமானது போல, இவர்கள் மூவரின் தந்தைமார்களும் (முரளி, பிரபு, கார்த்திக்) எண்பதுகளின் மத்தியில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் கோலோச்சியவர்கள்.

இதில் விக்ரம் பிரபு ஏற்கனவே திருமணமானவர். அதர்வா தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என்று தள்ளி வைத்துவிட்டு தனது தம்பிக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்தவர். மூன்றாவதாக இந்த பட்டியலில் இருந்த கவுதம் கார்த்திக் விரைவில் திருமண பந்தத்தில் இணையப்போகிறார். ஆம் வரும் நவம்பர் 28ஆம் தேதி இவரது திருமணம் நடைபெற இருக்கிறது.

ஏற்கனவே நாம் சொன்ன தகவலின்படி கவுதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகன் இருவருக்குமிடையே தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்தபோது நட்பும் அதைத்தொடர்ந்து காதலும் துளிர்விட்டது.

ஒருகட்டத்தில் மஞ்சிமாவிடம் காதலைத் தெரிவித்தார் கவுதம் கார்த்திக். இரண்டு நாள் யோசனைக்குப் பிறகு தனது சம்மதத்தை தெரிவித்தார் மஞ்சிமா மோகன். இவர்களது காதலை இரு வீட்டாரும் ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.

இந்த நிலையில் மணமக்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பத்திரிக்கையாளர்கள் முன்பாக தங்களது திருமணம் வரும் இருபத்தி எட்டாம் தேதி நடைபெற இருக்கிறது என்பதை கூட்டாக அறிவித்தனர்.
மஞ்சிமா மோகன் மலையாள திரையுலகில் பல படங்களில் குழந்தைன் நட்சத்திரமாக நடித்து, ஒரு வடக்கன் செல்பி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். அந்த படத்தின் மூலம் கிடைத்த புகழாள் தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா என்கிற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார்.
தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் தற்போது கவுதம் கார்த்திக்கை திருமணம் செய்துகொள்ள இருப்பதால் தற்காலிகமாக சினிமாவிற்கு குட்பை சொல்லி உள்ளார்.