வெகு சில இயக்குனர்கள் மட்டுமே மிகப்பெரிய ஹீரோக்களை வைத்து வெற்றிப்படங்களை கொடுத்தாலும் கூட, தங்களுக்கு மன திருப்தியான கதையும் கதைக்களமும் கிடைத்தால் அடுத்ததாக சிறிய நடிகர்களை வைத்து கூட படங்களை கூட இயக்குவதற்கு தயக்கம் காட்ட மாட்டார்கள்.

அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன், பா ரஞ்சித் ஆகியோரைப்போல இயக்குனர் மாரி செல்வராஜும் தற்போது தனது நான்காவது படம் குறித்த ஆச்சரியத்தை நமக்கு அளித்துள்ளார்,
பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து அவருக்கு தனுஷ் நடித்த கர்ணன், அதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதில் மாமன்னன் படத்தை முடித்து அந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அடுத்ததாக அவர் எந்த பெரிய ஹீரோவை இயக்கப்போகிறார் என எதிர்பார்ப்பு நிலவிய சூழலில் தற்போது தனது நான்காவது படமாக வாழை என்கிற படத்தை அறிவித்துள்ளார் மாரி செல்வராஜ்.

இந்த படத்தின் படப்பிடிப்பு துவக்க விழாவுடன் தற்போது நடைபெற்றுள்ளது. மாரிசெல்வராஜ் பட ஹீரோவான உதயநிதி இந்த நிகழ்வில் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

இந்த படத்தின் கதையை சிறுவர்களை மையப்படுத்தி உருவாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். மேலும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்த படத்தை மாரிசெல்வராஜே தயாரிக்கிறார். கர்ணன் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய சந்தோஷ் நாராயணன் மீண்டும் இந்த படத்தில் அவருடன் கை கோர்த்துள்ளார்