V4UMEDIA
HomeReviewபேட்டைக்காளி (வெப்சீரிஸ்) ; விமர்சனம்  

பேட்டைக்காளி (வெப்சீரிஸ்) ; விமர்சனம்  

சமீப நாட்களாக நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக மீண்டும் வெளிநாட்டு அமைப்பான பீட்டா தடை கேட்டு உச்சநீதிமன்ற கதவை தட்டி உள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டின் அருமை பெருமை குறித்தும், நமது தமிழர்கள் கலாச்சாரம் குறித்தும் எடுத்துரைக்கும் விதமாக வெளியாகியுள்ளது பேட்டைக்காளி வெப் சீரிஸ்.

கிராமத்து பண்ணையார் வேல.ராமமூர்த்தி. அவரது காளை எப்போது ஜல்லிக்கட்டில் இறங்கினாலும் யாராலும் பிடிக்க முடியவில்லை என்கிற கர்வம் அவருக்கு எப்போதும் உண்டு. அதேசமயம் அடுத்து நடக்கும் ஜல்லிக்கட்டில் அவரது காளையை அடக்குகிறார் பக்கத்து கிராமத்தை சேர்ந்த கலையரசன். இதனால் பண்ணையாருக்கு கோபம் ஏற்பட கலையரசனுக்கு எதிராக தனது ஆட்களை ஏவி விடுகிறார்.

அவர்களை எல்லாம் அடித்து துவைக்கும் கலையரசன், ஏற்கனவே இருக்கும் பகையையும் கோபத்தையும் இன்னும் பெரிதாக்க ஒரு கட்டத்தில் இது கலையரசனின் உயிரையே காவு வாங்குகிறது.

அவருக்காக பழிதீர்க்க களத்தில் இறங்குகிறார் அவரது மாமா கிஷோர்.  அந்த நிகழ்வில் எதிர்பாராதவிதமாக பண்ணையாருக்கு கண்கள் பறிபோக அவரது இடத்திற்கு பொறுப்பேற்கிறார் அவரது மகன்.

அதுமட்டுமல்ல அந்த சம்பவத்தில் பண்ணையாரின் விசுவாசியாக இருக்கும் நபரும் எதிர்பாராத விதமாக கொல்லப்படுகிறார். அவரது நினைவாக அவரது இன்னொரு சகோதரரும், தங்கை ஷீலா ராஜ்குமாரும் சேர்ந்து பேட்டைக்காளி என்கிற பெயரில் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்க்க துவங்குகின்றனர்.

ஒருகட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் பேட்டைக்காளியை பண்ணையாரின் பொறுப்பிலிருக்கும் அவரது மகன் அனுமதியுடன் களத்தில் இறக்கி வெற்றியை பெற்று அவரை தலைநிமிர செய்கின்றனர்.

இதற்கு அடுத்து இந்த பேட்டைக்காளியை அடக்க போகும் வீரன் அந்த ஊருக்கு வருகிறார்.. அவரால் அந்த பேட்டைக்காளியை அடக்க முடிந்ததா ? யார் காளையை அடக்குகிறார்களோ அவரைத்தான் மணமுடிப்பேன் என சபதம் செய்திருந்த ஷீலா ராஜ்குமாரை அவரால் திருமணம் செய்ய முடிந்ததா ? என்பதற்கு பின்வரும் எபிசோடுகள் பதில் சொல்லும் என எதிர்பார்க்கலாம்.

ஒரு சினிமாவுக்கான அத்தனை இலக்கணங்களும் கொஞ்சம் கூட குறையாமல் இந்த வெப்சீரிஸின் ஒவ்வொரு எபிசோடிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது. ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் தங்கள் கௌரவத்தையும் அதன்மீது ஏற்றி வைப்பதால் ஏற்படும் விருப்பு வெறுப்புகள், ரசாபாசங்கள் என எல்லாவற்றையும் தனது கோபாவேசமான நடிப்பில் வெளிப்படுத்துவதற்கு நடிகர் வேல.ராமமூர்த்தியை விட்டால் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். அவர் கோபப்படும்போது நமக்கே பயம் வருகிறது. அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளார் மனிதர்.

கிராமத்து இளைஞனுக்கு உண்டான துடிப்பும் துணிவுமாக கிராமத்து சண்டியர் ஆகவே மாறியுள்ளார் கலையரசன். நட்புக்கு அவர் மரியாதை கொடுப்பதும் அந்த நட்பே அவருக்கு எதிராக மாறுவதும் எதிர்பாராத ஒன்று.

வேல.ராமமூர்த்தியின் மகனாக நடித்திருப்பவர் தனது தந்தையின் இடத்திற்கு வர ஆசைப்படுவதும், ஆனால் அவருடைய அடக்குமுறைக்கு அடங்கிய செல்வதும், மனதுக்குள் பொங்குவதுமென தனது இயலாமையை அழகாக நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். ஜல்லிகட்டுக்காளையை வளர்க்கும் கிராமத்து பெண்ணாகவே மாறிவிட்டார் ஷீலா ராஜ்குமார்.  

இயக்குனர் லா.ராஜ்குமாரின் தெளிவான, நேர்த்தியான டைரக்சனால் அடுத்தடுத்து வரும் பாகங்களில் இன்னும் எதிர்பாராத விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்பது இந்த சில எபிசோடுகளிலேயே நன்றாக தெரிந்து விடுகிறது.

காத்திருப்போம் அடுத்த எபிசோடின் வரவுக்காக..

Most Popular

Recent Comments