நடனத்தை மையப்படுத்திய படங்கள் தமிழ் சினிமாவில் குறைவாகத்தான் வந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில் அந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக தற்போது மிகப்பெரிய வெப் சீரிஸாசாக உருவாகியிருக்கிறது ‘ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்’.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடனத்தை மையப்படுத்தி இயக்குனர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியிருந்த லட்சுமி திரைப்படத்தில் குட்டி பொண்ணாக ஆடி அசத்திய பேபி தித்யா, இந்தப்படத்தில் கிட்டத்தட்ட அதே போன்று ஒரு நடனப்பெண்ணாக இளம்பருவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தையும் லட்சுமி படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் தான் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இருந்து தயாரித்துள்ளார். இயக்குனர் பாலாவிடம் சிஷ்யையாக பணிபுரிந்த மிருதுளா என்பவரும் மற்றும் பிரசன்னா இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.
இந்த தொடரில் லட்சுமி பேபி தித்யா சாகர் பாண்டேவுடன் சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாகேந்திர பிரசாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நவம்பர் 18 முதல் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ள இத்தொடரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, ஒரு தனியார் மாலில், பொதுமக்கள் மத்தியில் கலைநிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பாலா, நடிகர் ஜீவா, நடன இயக்குனர்கள் ராஜூ சுந்தரம், நாகேந்திர பிரசாத், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் இயக்குனர் பாலா பேசும்போது, “எனது உதவியாளர் மிருதுளா இந்த தொடரை இயக்கியுள்ளார். அவருக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள். இந்த தொடர் பார்க்க நன்றாக உள்ளது. தொடரில் பங்குகொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
இயக்குனர் விஜய் பேசும்போது, “பாலா சார் எனது மானசீக குரு அவர் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. இந்த தொடருக்கு மூன்று ஹீரோ பரேஷ் ஜீ, சாம் CS, மதன் கார்க்கி மூவரின் பங்களிப்பும் அற்புதம். சந்தீப்பின் ஒளிப்பதிவு மிக தரமானதாக இருந்தது. பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் மிகப்பெரும் உதவியாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. குழந்தைகள் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். இந்த மாதிரி தொடர் இந்தியாவில் இது தான் முதல் முறை உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.