தான் இயக்கிய கோமாளி என்கிற முதல் படம் மூலம் கவனிக்கப்பட்டு, தற்போது தான் நடித்து இயக்கியுள்ள இரண்டாவது படமான லவ் டுடே மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு புகழும் பெற்றுள்ளார் இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

இன்றைய இளைஞர்களின் மனநிலையை, காதல் குறித்து அவர்களுக்கு உள்ள புரிதலை நக்கலும் நையாண்டியுமாக படம் முழுக்க ரசித்து சிரிக்கும் விதமாக படமாக்கியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். ஒரு நடிகராகவும் அவர் இந்த படத்தில் பாஸ் மார்க் வாங்கி விட்டார்.

அதேசமயம் சில காரணங்களால் அவர் குறித்த எதிர்மறையான செய்திகள் குறிப்பாக பேஸ்புக்கில் வெளியாக ஆரம்பித்தன. அதாவது அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக பேஸ்புக்கில் மற்ற சினிமா கலைஞர்கள் பற்றி, வேறு விஷயங்களில் அவர் கூறிய கருத்துக்கள் பற்றி பலவற்றை வேண்டுமென்றே அவருக்கு சிக்கலை உருவாக்க வேண்டுமென பரப்ப ஆரம்பித்தனர்.

இதனால் தேவையில்லாத சங்கடங்கள் உருவாவதாக நினைத்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தனது பேஸ்புக் பக்கத்தை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தற்போது சோசியல் மீடியாவில் சுற்றிவரும் பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை. ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறிவிடும் என்பதால் என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தை டீ ஆக்டிவேட் செய்து விட்டேன். நானும் தவறு செய்துள்ளேன் தான்.. வயதுக்கு ஏற்ப நாமும் மாறுவோம்.. கற்றுக்கொள்வோம்.. அதை சரி செய்ய முயற்சித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.