சசிகுமார் நடித்துள்ள நான் மிருகமாய் மாற திரைப்படம் நவம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை கழுகு பட புகழ் இயக்குனர் சத்யசிவா இயக்கியுள்ளார். கதாநாயகியாக வல்லக்கோட்டை, முரண் ஆகிய படங்களில் நடித்த ஹரிப்பிரியா, பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார் ஜிப்ரான். சசிகுமார் நடித்த குட்டிப்புலி படத்திற்கு பிறகு அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் ஜிப்ரான். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இந்தப் படத்தில் பாடல்கள் எதுவுமே இல்லை. ஒரு பக்கம் பாடல்கள் இல்லை என ஜிப்ரான் சந்தோஷப்படுகிறார், இன்னொரு பக்கம் நடன காட்சிகளே இல்லை என்று சசிகுமாரும் சந்தோஷப்படுகிறார். அதேசமயம் பின்னணி இசையமைப்பதில் மிகப்பெரிய சவால்களை சந்தித்துள்ளார் ஜிப்ரான்.
இதுபற்றி சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஜிப்ரான் கூறும்போது இயக்குனர் சத்திய சிவாவின் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் இந்த திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒரு புதுமையை கையாள எண்ணினார். அதாவது இசைக்கருவிகளை பயன்படுத்தாமல் நாம் அன்றாடம் கேட்கும் சத்தங்களை வைத்து மட்டுமே இசையை உருவாக்க வேண்டும் என நிர்பந்தம் வைத்தார்.
இதனைப் புரிந்து கொள்ள தொடக்கத்தில் சிரமம் இருந்தாலும், பின்னர் அவர் கூறிய வண்ணமே இசை அமைத்துக் கொடுத்தேன். படத்தின் தொகுப்பாளர் ஒரு வித்தியாசமான முறையை இப்படத்தில் கையாண்டுள்ளார். ஆரம்பம் முதலே படத்தில் ஒரு வேகம் இருக்கும். நானும் சசிகுமாரும் குட்டிப்புலி திரைப்படத்திற்கு பின் இப்பொழுது ஒன்றிணைகிறோம். படத்தின் வெளியீட்டிற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன்” என்று கூறினார்