மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தென்னிந்திய அளவில் அனைவராலும் விரும்பப்படும் இயக்குனராக மாறியுள்ளார் வெங்கட்பிரபு. இதைத்தொடர்ந்து அவருக்கு தெலுங்கிலும் படம் இயக்க வாய்ப்பு தேடி வந்தது அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் இளம் நாயகனாக நாகசைதன்யாவை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் வெங்கட்பிரபு.

இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, வில்லனாக ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் அரவிந்த்சாமி களமிறங்கியுள்ளார். இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக ஹைதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு மகேஷ் மாத்யூ மாஸ்டர் மேற்பார்வையில் நாகசைதன்யா, அரவிந்த்சாமி மோதும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.

மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சரத்குமார் மற்றும் சம்பத்ராஜ் ஆகியோரும் கதாநாயகி கீர்த்தி ஷெட்டியும் இந்த ஷெட்யூலில் பங்கேற்று நடித்துள்ளனர்.

இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தின் மூலம் நடிகர் நாக சைதன்யா நேரடித் தமிழ்ப் படத்தில் அறிமுகமாகிறார். அதேபோல, இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இசை மேதைகளான தந்தை-மகன் இணை ‘இசைஞானி’ இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்















