சசிகுமார் நடித்த கொம்பு வச்ச சிங்கம்டா படம் இந்த வருட துவக்கத்தில் வெளியான நிலையில் கிட்டதட்ட பத்து மாத இடைவெளி கழித்து அவரது படம் மீண்டும் தியேட்டருக்கு வருகிறது. அதேசமயம் ஒன்றல்ல இரண்டு படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் ரிலீஸாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் முதல் படமாக வரும் நவம்பர் 18ஆம் தேதி சசிகுமார் நடித்துள்ள நான் மிருகமாய் மாற திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படத்தை இயக்குனர் சத்யசிவா இயக்கியுள்ளார்.

இதை தொடர்ந்து நவம்பர் 25ஆம் தேதி சசிகுமார் நடித்துள்ள காரி திரைப்படம் வெளியாகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹேமந்த் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற நான் மிருகமாய் மாற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சசிகுமார் பேசும்போது, “எனது இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகின்றன. இன்னொரு படத்தை கொஞ்சநாள் தள்ளி ரிலீஸ் செய்யலாம் என்பதுதான் என் விருப்பம்.. இரண்டு தயாரிப்பாளர்களையும் கலந்துபேசி ஒரு முடிவு எடுக்க கூறியிருந்தேன். ஆனால் அவர்கள் இதுபற்றி பேசிக் கொள்ளவில்லை. அதற்காக நான் என்னுடைய படத்தை புரமோட் செய்யாமல் இருக்கமுடியாது. இரண்டுமே நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் தான்” என்று கூறினார்.

நான் மிருகமாய் மாற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஹரிப்ரியா ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் திரையுலகில் நுழைந்துள்ளார். அதிலும் இதற்கு முன்னதாக தான் நடித்த வல்லக்கோட்டை என்கிற படத்தை தயாரித்த அதே நிறுவனத்தின் தயாரிப்பில் மீண்டும் நடித்துள்ளார் என்பது ஆச்சரியம்தான்.

இந்த படத்தில் சசிகுமார் சவுண்ட் சீனியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விக்ராந்த் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் எதுவுமில்லை படத்திற்கு ஜிப்ரான் பின்னணி இசை அமைத்துள்ளார்.















