ஆண்ட்ரியா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் அனல்மேலே பனித்துளி. இந்த படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வரும் நவம்பர் 18-ம் தேதி வெளியாக இருக்கிறது.
கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் ஆண்ட்ரியா, இந்த படத்தில் நீதிக்கான போராட்டத்தில் எந்த நிலையிலும் தன்னை மாற்றிக்கொள்ளாத ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஒரு கட்டத்தில் அவர் இந்த வழக்கை கைவிட்டு விட்டு தனது வழக்கமான வாழ்க்கையைத் தொடர வேண்டும் என நிர்ப்பந்திக்கப் படுகிறார்.
தன்னுடைய இந்த தடைகளை எல்லாம் தாண்டி தன்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை அவர் இந்த வழக்கிற்காக போராடினாரா இல்லை பாதியிலேயே கைவிட்டு ஒதுங்கினாரா என்பதுதான் இந்த படத்தின் கதை.
இதுபற்றி இயக்குனர் கெய்சர் ஆனந்த் கூறும்போது, “கடினமான் சூழலை ஒரு பெண் வாழ்வில் எதிர்கொள்ளும் போது அவள் எப்படி அதில் இருந்து மீண்டு வருகிறாள். அதை எப்படி அவள் எதிர்கொள்கிறாள் என்பதும் இந்தக் கதையில் காண்பிக்கப்படுகிறது. இது போன்ற ஒரு வலுவானக் கதையில் ஆண்ட்ரியாவை கதாநாயகியாக கொண்டிருப்பது எங்களது அதிர்ஷ்டம்.
மதி எனும் கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய முழு மனதையும் கொடுத்து நடித்திருக்கிறார். ஆண்ட்ரியாவின் நடிப்பு மற்றும் கதையைப் பார்த்து விட்டு பார்வையாளர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்தப்படத்தில் ஆதவ் கண்ணதாசன், அழகம் பெருமாள், இளவரசு, அனுபமா குமார் மற்றும் லவ்லின் சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.