சென்னையில் மிகப்பிரபலமான வேல்ஸ் குழும கல்வி நிறுவனங்களின் சேர்மனாக இருப்பவர் டாக்டர் ஐசரி கணேஷ். இன்னொரு பக்கம் தனது தந்தையின் பாதையை பின்பற்றி சினிமாவிலும் கால் பதித்து வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இதில் ஒரு பக்கம் முன்னணி நடிகர்கள், இன்னொரு பக்கம் மிக திறமையான வளர்ந்து வரும் படைப்பாளிகள் என எல்லோருக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து படங்களை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார் டாக்டர் ஐசரி கணேஷ் இந்தத் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த திரு. சஞ்சய் சுப்பிரிய அவர்களை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார் ஐசரி கணேஷ்.

இவருக்கு ஆதரவாக 20 மாநிலங்களும், திரு. சஞ்சய் சுப்பிரிய அவர்களுக்கு ஆதரவாக 15 மாநிலங்களும் வாக்களித்துள்ளனர்.

மேலும் ஐசரி கணேஷ் அணியில் செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் (5), இணை செயலாளர்கள் (3), உறுப்பினர்கள் என அனைவரும் வெற்றி பெற்று இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தனி முத்திரை பதித்தனர்.