சுந்தர்.சி படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் அவரது ஆஸ்தான இசையமைப்பாளராக வலம் வந்தவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. அதைத்தொடர்ந்து ஒருகட்டத்தில் மீசைய முறுக்கு என்கிற படம் மூலமாக அவரை ஹீரோவாகவும் அறிமுகப்படுத்தி அழகு பார்த்தார் சுந்தர்.சி.

அந்த படத்தை தானே இயக்கி நடித்த ஹிஹாப் ஆதி, தொடர்ந்து படங்களில் ஒருபக்கம் நடித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் இசையமைத்து வருகிறார்.
சமீப வருடங்களாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்த படங்களில் நடித்துவந்தார் ஹிப்ஹாப் ஆதி. அப்படி அவர் நடித்த அன்பறிவு படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த நிலையில் புதிய மாற்றமாக தற்போது ஐசரி கணேசன் வேல்ஸ் சினிமா நிறுவனத்தின் காம்பவுண்டுக்குள் அடி எடுத்து வைத்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. ஆம் ஆதி நடிக்கும் அடுத்த படத்தை இந்த நிறுவனம்தான் தயாரிக்கிறது.

இந்த படத்தை கார்த்திக் வேணுகோபாலன் என்பவர் இயக்குகிறார். இவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிக்பாஸ் புகழ் ரியோவை கதாநாயகனாக வைத்து நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு என்கிற படத்தை இயக்கியவர்.அதைத் தொடர்ந்து இந்தப் படத்தை இயக்குகிறார்.

இன்னொரு பக்கம் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் கோகுல் இயக்கத்தில், நடிகர் ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.