கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மூன்றாவது முறையாக இணைந்து நடித்த படம் வெந்து தணிந்தது காடு. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
குறிப்பாக இந்த படம் கேங்ஸ்டர் படமாக உருவாகி இருந்தாலும் வழக்கமான கௌதம் மேனன் பாணியிலிருந்து சற்றே விலகி வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டிருந்தது.
இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்ததும் அதில் தாமரை எழுதி பிரபலமான மல்லிப்பூ பாடலும் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணங்களாக அமைந்து விட்டன.
படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்த நிலையில் இந்த படத்தின் 50 நாள் விழா கொண்டாட்டம் தற்போது நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் படத்தில் பங்கு பெற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் இருவரும் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ராதிகா இந்த படம் பற்றி கூறும்போது, “பல ஆண்டுகளாக வெற்றி விழா என்று ஒன்று மறைந்துபோய் இருந்தது. இந்த படத்திற்கு அது நிகழ்ந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த படம் ஒரு பெரிய பலப்பரிட்சை தான். இந்த படம் கௌதம் மேனனின் பாணியில் இருந்து முழுவதுமாக மாறுபட்டு இருந்தது. சிம்பு இதில் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார் என்றார்.
இந்த படத்தில் நாயகனான சிம்பு இந்த வெற்றி குறித்து கூறும்போது, “இந்த படத்திற்கு ஒரு சிறப்பாக வெளியீட்டை கொடுத்த உதயநிதி அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் பங்கேற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் பணியாற்றியது மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்தது.
ஏ.ஆர்.ரகுமானுடைய இசைக்கு எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உடன் பணியாற்றுவது எனது சொந்த நிறுவனத்தில் பணியாற்றுவது போல் இருக்கிறது. இந்த படம் ரத்தமும் சதையும் கலந்த ராவான படமாக அமைந்தது. அதை வரவேற்ற மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்று கூறினார்,