தமிழ் திரையுலகில் பத்து வருடங்களுக்கு மேலாக நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்து பின்னர் தற்போது ஹீரோவாகவும் மாதிரி அதிலும் தனித்துவமாக சாதித்து வருபவர் நடிகர் சந்தானம். இந்த நிலையில் நடிகர் சந்தானத்தின் மைத்துனர் வினோத் துரைசாமி தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். இவரும் மற்றும் தங்கராஜ் என்பவரும் இணைந்து என்என் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவினை தொடந்து, படக்குழுவினர் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். படம் குறித்த செய்திகளை கேட்டறிந்த நடிகர் சந்தானம், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்கள் வருவது அரிதாகிவிட்டது, அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் முழுக்க முழுக்க இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக, ரொமான்ஸ் காமெடி ஜானரில் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இப்படம் உருவாகவுள்ளது.
நடிகர் மைக்செட் ஶ்ரீராம் இப்படம் கதை நாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். நடிகை மானசா மற்றும் ரிமி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். படத்தில் நடிக்கும் மற்ற முக்கிய கதாப்பாத்திரங்களுக்காக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
தற்போது இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தினை இயக்குநர் விவேக் எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் அருள்ராஜ் கென்னடி இசையமைக்க, முத்து மூவேந்தர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். P.S.ராபர்ட் கலை இயக்கம் செய்கிறார். படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.