கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்ரம் பிரபு நடிப்பில் டாணாக்காரன் என்கிற படம் வெளியானது ஆயுதப்படை வீரர்கள் பயிற்சி பெறும் காலத்தில் அங்குள்ள உயர் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சனையில் சிக்கிக்கொண்டு என்னென்ன சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை இதுவரை வெளிவராத தகவல்களாக ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கும் விதமாக அழகாக சொல்லப்பட்டிருந்தது. அந்த படம் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.
இந்தநிலையில் அதேபோன்று ஆயுதப்படை காவலர்களின் இன்னும் சொல்லப்படாத பிரச்சனைகளை புதிய கோணத்தில் சொல்ல வருகிறது ரத்த சாட்சி என்கிற திரைப்படம்.
இப்படத்தை ரஃபீக் இஸ்மாயில் என்பவர் இயக்கியுள்ளார், ஆஹா ஓடிடி தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதிய பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கைதிகள் என்கிற சிறுகதையை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி உள்ளது.
இந்த கதையை எழுதியதற்கான அனுபவங்களையே இன்னொரு படமாக தயாரிக்கலாம் என்று கூறும் ஜெயமோகன் இந்த கதை உருவான விதம் குறித்து மனம் திறந்துள்ளார்.
“ரஃபிக் இஸ்மாயில் என்னும் இயக்குனர் என்னை அணுகி கைதிகளை திரைப்படமாக்க விரும்பினார், இந்த சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் பிரபல இயக்குனர் திரு.மணிரத்னம் இக்கதையை திரைக்கு மாற்ற நினைத்தார், கதையின் உரிமையைப் பெற பிரபல இயக்குனர் திரு.வெற்றிமாறன் என்னை அணுகினார், மேலும் கதை ஏற்கனவே ரஃபிக்கிடம் கொடுக்கப்பட்டதாக அவர்களிடம் தெரிவித்தேன்” என்றார்.
ஆயுதப் படைகளுக்குள் மனிதாபிமானம் இருக்கிறதா? இருவரின் வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கிறது? என்பதற்கு இப்படம் சரியான சான்றாகும்.
இந்தப்படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் நடித்துள்ளனர். திருமதி அனிதா மகேந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை ‘ஆஹா தமிழ் OTT’ தளம் விரைவில் ஒளிபரப்ப உள்ளது