கடந்த 35 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமான நடிகராகவும் இன்னொரு பக்கம் ஒரு கமர்சியல் இயக்குனராகவும் வலம் வருபவர் நடிகர் அர்ஜுன். கடந்த சில வருடங்களாக குணசித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் அர்ஜுன்.
ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது மகள் ஐஸ்வர்யா நடித்த சொல்லி விடவா என்கிற படத்தை இயக்கிய அர்ஜுன் தற்போது மீண்டும் தனது மகள் தெலுங்கில் அறிமுகமாகும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் விஸ்வக் சென் என்பவர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் திடீரென ஹைதராபாத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அர்ஜுன் படத்தின் ஹீரோ விஸ்வக் சென் பற்றி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
குறிப்பாக இந்த படத்தின் ஹீரோ விஸ்வக் சென் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்துக்கு வரவில்லை என்றும் கேரளாவில் ஏற்பாடு செய்திருந்த படப்பிடிப்பிற்கு அவர் வராததால் அவரும் நடிகர் ஜெகபதிபாபுவும் இணைந்து நடிக்கும் பல காட்சிகளை எடுக்க முடியாமல் போய்விட்டது என்றும் இதனால் மிகப்பெரிய அளவில் நேர விரையமும் பொருள் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
அதுமட்டுமல்ல இனி இந்த படத்தில் விஸ்வக் சென்னை நீக்கிவிட்டு வேறு ஒரு ஹீரோவை வைத்து தான் படமாக்க போகிறேன் என்றும் கூறியுள்ளார் அர்ஜுன். விஸ்வக் சென் செயல்பாடுகள் பற்றி மற்றவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தேன் என்றும் அவர் கூறினார்.