ஒரு நாவலை படமாக்குவது மிகப்பெரிய விஷயம். அதிலும் ஐந்து பாகங்கள் கொண்ட ஒரு சரித்திர நாவலை அதன் சுவை குறையாமல் படமாக்குவது என்றால் சாதாரண விஷயமா ? அப்படி அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தனது இத்தனை வருட அனுபவத்தில் மிக நேர்த்தியாக இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.

முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ல் வெளியாகி இன்றும் தியேட்டர்களில் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் நாட்டுடமை ஆக்கப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதேசமயம் இந்த படத்தின் மூலம் தயாரிப்பு நிறுவனமான லைகா மிகப்பெரிய லாபத்தையும் பார்த்துள்ளது.

இந்த நிலையில் லைகா குழுமம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும், அமரர் கல்கியின் புகழையும், அவரது சேவைகளையும், பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் இயங்கி வரும் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மகிழ்ச்சியுடன் முன்வந்தனர்.

மேலும் அறக்கட்டளையின் சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் லைகா குழும தலைவர் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்து அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு வருகை தந்தனர்.

அங்கு கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மகன் கல்கி ராஜேந்திரன் அவர்களின் முன்னிலையில், அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் திருமதி சீதா ரவியிடம் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினர்..