தெலுங்கு திரையுலகின் மிக பிரபலமான கீதா ஆர்ட்ஸ் சார்பில், அல்லு அரவிந்த் தயாரிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ஊர்வசிவோ ராட்சசிவோ. அல்லு அர்ஜுனின் தம்பியும் தமிழில் கவுரவம் படத்தில் கதாநாயகனாக நடித்தவருமான அல்லு சிரிஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை நாயகி அனு இம்மானுவேல் நடித்துள்ளார். ராகேஷ் சசி இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
கோலிசோடா-2 கொலையுதிர் காலம் உள்ளிட்ட ஹிட் படங்களுக்கு இசையமைத்த அச்சு ராஜாமணி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர்தான் தற்போது விஜய் ஆண்டனி நடித்துவரும் மழை பிடிக்காத மனிதன் படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
இந்த படம் தமிழில் யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசை அமைத்த பியார் பிரேமா காதல் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக உருவாகி உள்ளது. நேற்று (நவ -4) இந்தியா முழுக்க வெளியான இந்தப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் படமாக மாறியுள்ளது.
இந்தநிலையில் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன சந்தோஷத்தில், குறிப்பாக பாடல்களுக்கு ரசிகர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தவரும் மகிழ்ச்சியில் இருக்கும் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி,
இந்தப் படத்தின் ஹீரோ அல்லு சிரிஷும் நானும் 2015ல் இருந்தே நெருங்கிய நண்பர்கள். அவர் மூலமாகத்தான் இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பும் என்னை தேடி வந்தது..
பியார் பிரேமா காதல் படத்தை நான் கிட்டத்தட்ட ஐந்து தடவைக்கு மேல் பார்த்துவிட்டேன். இங்கே யுவன் ரொம்ப அழகாக பண்ணியிருக்கிறார். ஆனால் தெலுங்கில் இந்த படத்தை ரீமேக் என பார்க்காமல் ஒரு தனி தெலுங்கு படமாகத்தான் உருவாக்கியுள்ளோம். குறிப்பாக ஒரிஜினலை கெடுத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். தமிழில் பயன்படுத்திய எந்த ஒரு இசையையும் இந்தப்படத்தில் தெலுங்கிற்காக நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை. தமிழுக்கும் தெலுங்கிற்கும் ரொம்பவே வித்தியாசம் காட்டி இருக்கிறோம் பாடல்கள், பின்னணி இசை விஷயத்தில் இந்த படத்தில் பணியாற்ற முழு சுதந்திரம் எனக்கு இருந்தது” என்று கூறியுள்ளார்.