எப்போதும் கலகலப்பான நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படங்களை தருவதில் வல்லவரான சுந்தர்.சி இந்த முறை முதன்முறையாக ஒரு ஃபீல் குட் படம் தர முயற்சித்திருக்கிறார். இதற்காக வழக்கமாக அவர் பயணிக்கும் வழக்கமான பாணியில் இருந்து மாறியுள்ளாரா ? இல்லை தனது பாணியிலேயே இதை ஃபீல் குட் படமாக உணர வைத்தாரா? பார்க்கலாம்.
ஊட்டியில் மிகப்பெரிய செல்வந்தர் பிரதாப்போத்தன். அவரது மூன்று மகன்கள் ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய். ஒரே மகள் டிடி என்கிற திவ்யதர்ஷினி. ஸ்ரீகாந்த்துக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த சமயத்தில் இளைய மகன் ஜெய் ஊட்டியில் தனக்கு பிடித்தமான ஒரு இடத்தில் ஹோட்டல் அமைக்க நினைக்கிறார். அந்த இடத்திற்கு சொந்தமான செல்வந்தர் பிரதாப் போத்தனின் நண்பர் என்றாலும் தனது சொந்த பந்தத்தில் தான் அந்த இடத்தை விற்பேன் என்கிறார். இதனால் வெளிநாட்டில் இருந்து திரும்பும் அவரது மகளான மாளவிகா சர்மாவையே ஜெய்க்கு நிச்சயம் செய்கிறார்கள்.
அதேசமயம் ஜெய்யின் சிறுவயது தோழியாக கூடவே இருக்கும் அம்ரிதா ஐயர் விஜய்யை ஒரு தலையாக விரும்புகிறார். ஆனால் அவரது காதலை உணராத ஜெய் ஹோட்டல் கட்ட இடம் தரும் பணக்கார பெண்ணை மணக்க முடிவு செய்கிறார். ஆனால் அவரை திருமணம் செய்து கொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து வரும் மாளவிகாவை கண்டுகொள்ளாமல், ஹோட்டல் வேலைகளில் ஜெய் இறங்க, அவரை வந்தது முதல் பிக்கப் ட்ராப் செய்யும் அவரது அண்ணன் ஜீவாவுடன் நட்பாக பழகுகிறார் மாளவிகா சர்மா. ஒருகட்டத்தில் மாளவிகாவுக்கு ஜீவா மீது காதல் ஏற்படுகிறது
அதேசமயம் ஏற்கனவே ஜீவா, ஐஸ்வர்யா தத்தாவுடனான காதல் முறிந்துபோன விரக்தியில் தான் வீட்டுக்கே திரும்பி உள்ளார். ஒருபக்கம் காதல் தோல்வி, இன்னொரு பக்கம் தம்பிக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் என அவரால் மாளவிகா சர்மாவின் காதலை ஏற்க முடியவில்லை.
அதேசமயம் ஜெய் திருமணத்துடன் ஜீவாவின் திருமணத்தையும் நடத்திவிட முடிவுசெய்யும் அவரது பெற்றோருக்கு ஜீவாவின் காதல் முறிவு தெரிய வர உடனடியாக அவருக்கு திருமண புரோக்கர் யோகிபாபு மூலமாக ரைசா வில்சனை பெண் பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். ஆனால் மூத்த மகன் ஸ்ரீகாந்த் ஏற்கனவே ரைசாவுடன் மறைமுக தொடர்பு வைத்திருந்த காரணத்தால் அந்த பெண்ணை தன் தம்பி ஜீவாவுக்கு திருமணம் செய்யும் முடிவுக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து ஒரு வழியாக ஜீவாவின் திருமணத்தையும் நிறுத்துகிறார். இதற்கிடையே தான் ஜெய் தனது தோழி அம்ரிதா மீது தனக்கு காதல் இருப்பதை உணர்கிறார்.
இப்படி இடியாப்ப சிக்கலில் போகும் கதையில் யார் யாருடைய காதல், யார் யாருடன் சரியாக திருமண வாழ்க்கையில் இணைந்தது, அதற்குள் என்னென்ன பிரச்சினைகள் நடந்தன என்பதை மீதி கதை.
கேட்கும்போதே தலை சுற்றுகிறதா ? ஆனால் படத்தில் எந்தவித குழப்பமும் இல்லாமல் வெகு நேர்த்தியாக ரசிகர்களுக்கு புரியும் விதமாக இதனை காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. அவர் ஏற்கனவே சொன்னது போல முதல் 30 நிமிடங்கள் இவர்களது அறிமுகங்கள், ஆள்மாறாட்ட காதல் எனக்கு கொஞ்சம் கப்பல் போல மெதுவாகவே நகர்கிறது. அதேசமயம் யோகிபாபு உள்ளே வந்ததும் விமானம் போல வேகமெடுக்க ஆரம்பிக்கிறது.
யாரும் யாரிடமும் மனம் விட்டு முழுதாக எதையும் பேசிக் கொள்ளாததால் தான் சிக்கலுக்கு மேல் சிக்கல் உருவாகிறது என்பதை ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் ஆகியோரின் கதாபாத்திரங்கள் மூலமாக அழகாக விளக்கியிருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி
குடும்பத்தலைவன் ஆனாலும் கல்யாண குணம் மாறாத ஸ்ரீகாந்த், எதையும் சீரியஸாகவே அணுகும் ஜீவா, எல்லாமே விளையாட்டுதான் என நினைக்கும் ஜெய் என ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரங்களை அழகாக தங்களது நடிப்பால் வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையுமன்பால் இணைக்கும் நூலிழையாக கனகச்சிதமான கதாபாத்திரத்தில் தன்னை ஒரு சிறந்த நடிகையாக வெளிப்படுத்தி இருக்கிறார் டிடி.
ஐஸ்வர்யா தத்தா இரண்டு காட்சிகளில் வந்தாலும் அவரது கதாபாத்திரம் ஏற்படுத்தும் திருப்பம் அதிரடி. மாளவிகா சர்மா தனது நடிப்பால் மயக்குகிறார். அமிர்தா ஐயர் பக்கத்து வீட்டு பெண் போல எதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அருகில் இருக்கும்போது ஒருவரின் அருமை தெரியாது என்கிற திருச்சிற்றம்பல உண்மையை அவரது கதாபாத்திரம் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி.
இதில் ரைசா வில்சன் கதாபாத்திரம் அதிரடி மற்றும் காமெடி கலந்த ஒன்று. ரசிகர்களுக்கு சிரிக்கவும் வாய்ப்பு தருகிறார் ரைசா வில்சன். இவர்கள் தவிர படத்தின் முக்கிய தூணாக இருந்து தாங்கிப் பிடிக்கிறார் யோகிபாபு. கூடவே ரெடின் கிங்ஸ்லியும் இருந்தாலும் படத்தில் பல இடங்களில் இருவரும் அடக்கியே வாசித்திருக்கிறார்கள்.
பிரதாப்போத்தன் உள்ளிட்ட மற்ற குணசித்திர நடிகர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார்கள். குறிப்பாக ஒரு சராசரி இல்லத்தரசியின் எதிர்பார்ப்புகளையும் வேதனைகளையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா.
யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் அவ்வப்போது ரசிகர்களுக்கு உற்சாக டானிக் கொடுத்து துள்ளாட்டம் போட வைக்கிறது.
இப்படியெல்லாம் கூடவா காதலிப்பார்கள், இப்படி எல்லாம் காதல் நிகழுமா என்றெல்லாம் எந்த லாஜிக்கும் கேட்காமல் கதையோட்டத்துடன் பார்த்தால் இரண்டரை மணி நேரம் சிரித்து நிகழ்ந்து மகிழ அருமையான ஒரு ஃபீல் குட் படம்தான் இந்த காபி வித் காதல் .