தமிழில் காக்கா முட்டை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மணிகண்டன் அந்த படத்தின் மூலம் எதிர்பார்ப்புக்குரிய இயக்குனராக மாறினார். அதைத் தொடர்ந்து அவர் விஜய்சேதுபதியை வைத்து இயக்கிய ஆண்டவன் கட்டளை படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

அதையடுத்து அவர் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான கடைசி விவசாயி படமும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.

இந்த நிலையில் அவர் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் விஜய்சேதுபதி மட்டுமல்லாமல் நடிகர் மம்முட்டியும் முக்கிய வேடத்தில் இணைந்து நடிக்க உள்ளார் என்கிற தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சம்மந்தப்பட்ட நடிகர்களிடம் இருந்து இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

அந்தவகையில் ரஜினி, கமல், சிரஞ்சீவி என ஒவ்வொரு மொழியிலும் உள்ள முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துவிட்ட விஜய்சேதுபதி மம்முட்டியுடன் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.