சமீபகாலமாகவே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்தவகையில் உருவாகியுள்ள படம்தான் டிரைவர் ஜமுனா. ஏ.ஆர் முருகதாஸின் தம்பி திலீபனை கதாநாயகனாக்கி அவருக்கு வத்திக்குச்சி திலீபன் என்கிற பெயர் வர காரணமான வத்திக்குச்சி படத்தை இயக்கிய கின்ஸ்லி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் வரும் நவம்பர் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த படத்தில் தங்களது அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டனர்.
இயக்குனர் கின்ஸ்லி இந்த படம் உருவான விதம் குறித்து கூறும்போது, “ஒரு கார் பயணம் பற்றிய படம் என்பதால் டிரைவராக நடிக்கும் கலைஞரின் நடிப்புத் திறன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றால், இந்த திரைக்கதை வெற்றி பெறாது. முழு கதைக்கும் கதையின் நாயகி தான் மைய பாத்திரம். அவருடைய தோளில் சுமக்க வேண்டிய திரைக்கதை இது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய பங்களிப்பை அற்புதமாக வழங்கியிருக்கிறார்.
அதிலும் காரை ஓட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அதனுடன் சக நடிகர்களிடமும் பேசி நடிக்க வேண்டும். வண்டியை ஓட்டும் போது போக்குவரத்து நெரிசல், சாலை விதிகள் அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிலும் அவர்கள் காரில் அமர்ந்து பயணிக்கும் போது காட்சி கோணங்களுக்கு ஏற்ப நடிக்கவும் வேண்டும். இவை அனைத்தையும் சவாலாக ஏற்றுக் கொண்டு நடித்து அசத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ரசிகர்களை பயமுறுத்த வேண்டும் என்று நினைத்து காட்சிகளை உருவாக்குவது என்பது எளிதானது. ஆனால் கதையில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரத்தின் பயத்தை..அவருடைய நடிப்பின் மூலமாக பார்வையாளர்களுக்கு கடத்துவது என்பது பெரும் சவாலானது. இது இயக்குநர்களின் கையில் இல்லை. நட்சத்திர நடிகர்களின் கையில் தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒவ்வொரு நுணுக்கமான உணர்வுகளையும் அற்புதமாக உள்வாங்கி, வெளிப்படுத்தி, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்” என்றார்.
நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படம் குறித்து பேசும்போது, “கனா’ படத்திற்கு பிறகு எனது நடிப்பில் உருவான மூன்று திரைப்படங்கள் கொரோனா தொற்று காலகட்டத்தில் டிஜிட்டல் தளங்களில் தான் வெளியானது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் ‘டிரைவர் ஜமுனா’ வெளியாகிறது.
சின்ன பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருவது குறைந்துவிட்டது. அதிலும் டிஜிட்டல் தளங்களின் ஆதிக்கத்திற்கு பிறகு பெருமளவில் குறைந்து விட்டது. ஆனால் சின்ன பட்ஜெட்டாக இருந்தாலும், ஒரு படம் வித்தியாசமானதாகவும், தரமானதாகவும் இருந்தால் அதற்கான ஆதரவு குறையவில்லை. ‘டிரைவர் ஜமுனா’ அந்த வகையிலான படம் என்பதால், நம்பிக்கையுடன் நவம்பர் பதினொன்றாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
எனக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் அதிலும் வேகமாக கார் ஓட்டுவேன். அதனால் சண்டை பயிற்சி இயக்குநர் அனல் அரசிடம் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் டூப் போடாமல் நானே நடிக்கிறேன் என வாக்குறுதி அளித்தேன். இந்தப் படத்தில் லாரியுடன் நேருக்கு நேர் மோதும் ஒரே ஒரு காட்சியில் சிறிய பகுதியை தவிர, படம் முழுவதும் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டினேன்.
படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நெடுஞ்சாலைகள் தான் நடைபெற்றது. அதனால் மறக்க இயலாத அனுபவமாகவும் இருந்தது. இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.