ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்கிற படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அவரது இரண்டாவது படமான லவ்டுடே படத்தில் தானே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார். இந்த படத்தை மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

இந்த படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது. சில இயக்குனர்கள் முதல் படம் வெற்றி அடைந்ததுமே இரண்டாவது படத்தில் ஹீரோவாக மாறுவது அவ்வப்போது நடக்கும் விஷயம்தான். அந்த அடிப்படையில் தான் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக மாறி விட்டாரோ என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.

ஆனால் இதுபற்றி பிரதீப் ரங்கநாதன் கூறும்போது, “இந்த லவ் டுடே என்கிற கதை நான் குறும்படங்களை இயக்கி நடித்து வந்த சமயத்திலேயே ஒரு குறும்படமாக எடுக்கப்பட்ட படம் தான். அதில் நான் தான் கதாநாயகனாக நடித்து வந்தேன். சொல்லப்போனால் அந்தக் கதை எனக்காகவே எழுதப்பட்டது என்று கூட சொல்லலாம்.
அதனால் அது திரைப்படமாக எடுக்கப்படும்போது அதில் நானே நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதனால் தான் இந்த படத்திற்காக கதாநாயகனாக மாறினேன். இனிவரும் நாட்களில் இயக்குனர், கதாநாயகன் என இரண்டிலும் சமமாக பயணிப்பேன் என்று கூறியுள்ளார்.

பொதுவாகவே ஒருவரது செல்போனை இன்னொருவர் பார்ப்பதற்கு யாரும் கொடுப்பதில்லை.. அப்படிப் பார்ப்பது யாரும் விரும்புவதும் இல்லை. இது நண்பர்களுக்குள் மட்டும் அல்லாமல் காதலன் காதலி இருவருக்குமே கூட பொருந்துகின்ற விஷயம்.

அப்படிப்பட்ட சூழலில் ஒரே ஒருநாள் இருவரும் தங்களது போனை மாற்றி வைத்திருந்தால் என்ன நிகழும் என்பதை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்த வித்தியாசமான கான்செப்ட் தான் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது..