தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சில வருடங்களுக்கு முன்பு வரை பிஸியாக நடித்து வந்த நடிகை அமலா பால், திருமணத்திற்கு பிறகும் தனது திருமண முறிவுக்கு பிறகும் படங்களில் நடிப்பதை கொஞ்சம் குறைத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
கடந்த இரண்டு மூன்று வருடங்களில் அவர் நடித்த ஒரு சில படங்கள் மட்டுமே வெளியாகி உள்ளன. இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது தாய்மொழியாக மலையாளத்தில் மிகுந்த கவனம் செலுத்தி படங்களில் நடித்து வருகிறார் அமலா பால்.
அவரைப் பொறுத்தவரை தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து விட்டார். இந்த நிலையில் முதன்முதலாக அவருக்கு பாலிவுட்டில் இருந்து நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது.
அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அமலா பால். இந்த படம் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கைதி படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கிறார். தமிழில் நரேன் நடித்த கதாபாத்திரம் பெண்ணாக மாற்றப்பட்டு, அதில்தான் பெண் போலீஸ் அதிகாரியாக தபு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை நடிகர் அஜய் தேவ்கனே இயக்குகிறார் என்பது இந்த படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்று.