தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இளம் நடிகராக வளர்ந்து வருபவர் அசோக் செல்வன். தற்போது அவர் கதாநாயகனாக நடித்துள்ள படம் நித்தம் ஒரு வானம். இந்த படத்தை ரா.கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் சாகர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

படத்தில் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ராஜசேகர் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்த படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் சாகர் பேசும்போது, “இதுவரை போஸ்டர்களில் அசோக் செல்வனின் மூன்றுவிதமான கெட்டப்புகளை பார்த்திருப்பீர்கள். நான்காவதாக ஒரு கெட்டப்பும் இருக்கிறது. அது படம் பார்க்கும்போது உங்களை ஆச்சரியப்படுத்தும்” என்று ஒரு சஸ்பென்ஸ் வைத்து புதிய தகவலை கூறினார்.

இந்த படத்தில் நடித்தபோது படப்பிடிப்பில் ஏற்பட்ட ஆச்சரியமான ஒரு சம்பவம் பற்றி அசோக் செல்வன் பகிர்ந்து கொண்டார்.

“இந்தப்படத்தின் படப்பிடிப்பின்போது நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் அதிசயமான அனுபவம் கிடைத்தது. ரோதங் பாஸ் எனுமிடத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு, பட குழுவினர் அனைவரும் அங்கு சென்றோம். அங்கு சென்றவுடன், இது பனி விழும் சீசன் இல்லையென்று தெரிய வந்ததும் ஏமாற்றம் அடைந்தோம். இருந்தாலும் படப்பிடிப்பு நடத்துவோம் என்று நடத்தத் தொடங்கினோம்.

கோடை காலம் போல் வெயில் வெளுத்து வாங்கியது. எனக்கும், ரிது வர்மாவிற்குமான காட்சிகளைப் படமாக்கத் தொடங்கினோம். சில மணி நேரங்களிலேயே மெதுவாக பனி சாரல் தூறத் தொடங்கியது. 10 ,15 நிமிடத்திற்குள் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பனி பொழியத் தொடங்கியது.

நாங்கள் எங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து வியந்து கொள்கிறோம். உணர்வு மேலிட, இயக்குநரின் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்கின்றன. அங்குள்ள மக்கள், ‘இந்த சீசனில் பனி பொழிய தொடங்கி பதினெட்டு ஆண்டுகளாகிவிட்டது’ என்ற தகவலை எங்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது, நாங்கள் உண்மையில் ஆச்சரியப்பட்டு, அந்த அதிசய அனுபவத்தை உணர்ந்து கொண்டே படப்பிடிப்பை நடத்தினோம்.

சில தருணங்களில் நாம் ஏதாவது ஒன்றை வேண்டும் என்று விரும்பினால், அதனை இந்த பிரபஞ்சம் வழங்கும் என்பார்கள். அதனை நாங்கள் அந்த தருணத்தில் நிஜமாகவே உணர்ந்தோம். ” என்றார்