தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரமாவுக்கு அடுத்தபடியாக நகைச்சுவை நடிகையாக கிட்டத்தட்ட 40 வருடங்கள் தனி ஒரு ஆளாக சாம்ராஜ்யம் நடத்தி வருபவர் கோவை சரளா.
கடந்த சில வருடங்களாக நகைச்சுவை மட்டுமல்லாது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார் கோவை சரளா. அந்த வகையில் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள செம்பி என்கிற படத்தில் கதையின் நாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கோவைசரளா.
இதில் விஜய் டிவி புகழ் அஸ்வின் கதாநாயகனாக நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கமல் தலைமையில் நடைபெற்றது.
இந்த படத்தின் இசையை வெளியிட்ட கமல் பேசும்போது, “இங்கே கோவை சரளாவை எல்லோரும் அம்மா, அக்கா என குறிப்பிட்டார்கள். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.. எனக்கு சரளா பாப்பாவை நன்றாக தெரியும். இந்த படத்தில் நன்றாக நடித்துள்ளார். இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன். இங்கு நாம் அமைதியாக இருப்பதுதான் ஆபத்து. இதை ஏன் இப்படி பண்ற என கேட்பதற்கு ஆள் இல்லை என்றால் தொடர்ந்து தவறுகள் நடந்து கொண்டே இருக்கும். அதைச் சொல்லும் படம் இது. சிறிய படம், பெரிய படம் என எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை.. காலத்தால் பேசப்படும் படமே பெரிய படம். 16 வயதினிலே அப்படிப்பட்ட ஒரு பெரிய படம் இன்றைக்கும் பேசப்படுகிறது” என்று கூறினார்.
இந்த நிகழ்வில் கோவை சரளாவின் இன்னொரு ஆதர்ச இயக்குனரான கே.பாக்யராஜ் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
கோவை சரளாவின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர்கள் இரண்டு பேர். ஒருவர் இயக்குனர் கே.பாக்கியராஜ் இன்னொருவர் கமல்ஹாசன். பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் இருந்து தொடர்ச்சியாக அவரது படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் கோவை சரளாவுக்கு வாய்ப்பளித்து அவரை பெரிய நிலைக்கு கொண்டு வந்தவர் கே பாக்கியராஜ்.
அதேபோல நகைச்சுவை நடிகையாக இருந்த கோவை சரளாவை தனக்கு ஜோடியாக சதிலீலாவதி படத்தில் கதாநாயகியாக மாற்றியவர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.