தமிழ் சினிமாவில் வருடம் தோறும் வெளியாகும் படங்களில் பல இளைஞர்கள் ஹீரோவாகும் கனவுடன் உள்ளே நுழைகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் நிலைத்து நின்று தமிழ்சினிமாவில் தங்களுக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் அதிர்ஷ்டமும் வாய்ப்பும் அமைவதில்லை. அப்படி கிடைத்த ஒரு சிலர் அதை தக்கவைத்துக் கொண்டு தங்கள் திறமையை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற தொடங்குவார்கள். நடிகர் ஹரிஷ் கல்யாண் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.
சிந்து சமவெளி என்கிற படத்தில் அறிமுகமான ஹரிஷ் கல்யாண், தொடர்ந்து பொறியாளன் என்கிற படத்தில் நடித்தார். அதன்பிறகு பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படம் அவருக்கு ஒரு நல்ல வெளிச்சமாக அமைந்தது .
அந்த சமயத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது குணநலன்கள் மூலம் இன்னும் அதிக அளவில் ரசிகர்களை சென்றடைந்தார் ஹரிஷ் கல்யாண். அதைத்தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, ஓ மணப்பெண்ணே, தாராள பிரபு என தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை நிலைநிறுத்திக் கொண்டார் ஹரிஷ் கல்யாண்.
இந்த நிலையில் கடந்த ஆயுதபூஜை என்று தனது வருங்கால மனைவி நர்மதா உதயகுமார் என்பவரை ரசிகர்களுக்கு சோசியல் மீடியா மூலமாக அறிமுகப்படுத்தி விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்டார். சென்னையில் பிறந்த நர்மதா தற்போது ஸ்டார்ட் அப் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று இவர்கள் இருவரது திருமணம் திருவேற்காட்டில் உள்ள ஒரு மிகப்பெரிய அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த திருமணம் இருவரது பெற்றோர்களும் பார்த்து முடிவு செய்த திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது