சமந்தா கதாநாயகியாக நடிக்க உருவாகியுள்ள படம் யசோதா. இந்த படம் குறித்து பல செய்திகள் வெளியாகி வந்தாலும் தற்போது வெளியாகியுள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இந்த படத்தில் சமந்தா வாடகைத்தாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதுதான்.

கடந்த சில நாட்களாக இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இவர்கள் இருவரும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்ட விவகாரம் தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது யசோதா படத்தில் சமந்தா அதேபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால் இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.

கதையில் கடுமையான மருத்துவக் குற்றங்களை தைரியத்துடன் சமந்தா வெளிப்படுத்தும் வகையிலான காட்சிகள் மற்றும் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சமந்தாவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தவிர்த்து, உன்னி முகுந்தன் மற்றும் சமந்தாவுக்கு இடையிலான காதல் காட்சிகள் கதையை இலகுவாக்கும். நடிகை வரலக்ஷ்மி கதையில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் சமந்தா தவிர்த்து நடிகர்கள் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ப்ரிடா, ப்ரியங்கா ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பான் இந்தியா படமாக வரும் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். மணிசர்மா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.