V4UMEDIA
HomeNewsKollywood“நல்ல விஷயத்துக்காக பிடிவாதமா இருப்பேன்” ; 3.6.9 இசை விழாவில் பாக்யராஜ் ஓபன் டாக்

“நல்ல விஷயத்துக்காக பிடிவாதமா இருப்பேன்” ; 3.6.9 இசை விழாவில் பாக்யராஜ் ஓபன் டாக்

பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம் பி ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9.   இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார்.  இந்தப்படத்தில். வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டே பலர் நடித்துள்ளனர்.

உலக சினிமா வரலாற்றில் 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், ஒரு களத்தில் 24 கேமராக்கள், 150க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைள், 450தொழில்நுட்ப கலைஞர்களை  கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஷரிபா மூலமாக பரிந்துரை செய்யப்பட்டு அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் என்ற அமைப்பில் உலக சாதனைக்கான விருதையும் பெற்றுள்ளது. .

இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர் பாக்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் பாண்டியராஜன், இயக்குனர் சுப்பிரமணியம் சிவா, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இசையமைப்பாளர் தீனா, எழுத்தாளர் அஜயன் பாலா, லோக்கல் சரக்கு படத்தின் தயாரிப்பாளர் சாமிநாதன் ராஜேஷ் , நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஷரிபா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.  கலைப்புலி தாணு இந்த படத்தின் இசைத்தட்டை வெளியிட சிறப்பு விருந்தினர்கள் அதை பெற்றுக் கொண்டனர்.

இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது, “நான் கொஞ்சம் பிடிவாதக்காரன் என்று இங்கே சொன்னார்கள். அது உண்மைதான்.. நல்ல விஷயத்திற்காக எப்போதும் பிடிவாதமாக தான் இருப்பேன். நான் கதை எழுதிய ஒரு கைதியின் டைரி படத்திற்காக நான் எழுதிய கிளைமாக்ஸ் வேறு.. ஆனால் பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களாலும் எனது குருநாதர் பாரதிராஜாவுக்கு அது பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்பதாலும் வேறு மாதிரியான கிளைமாக்ஸ் வைத்து படமாக்கி படமும் ஹிட்டானது. அந்த கிளைமாக்ஸும் பேசப்பட்டது. ஆனால் அதே படத்தை இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து நான் இயக்க முடிவு செய்தபோது படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பலரும் என்னிடம் வந்து தமிழில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியையே இந்தியிலும் எடுங்கள்.. அமிதாப்பச்சனுக்கு அதுபோன்ற ஒரு கிளைமாக்ஸ் ரொம்பவே கம்பீரமாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் நான் எழுதி வைத்த கிளைமாக்ஸை படமாக்கியே தீர்வது என்று உறுதியாக இருந்தேன்.

இதுகுறித்து படத்தின் ஹீரோவான அமிதாப் பச்சனிடமே நேரடியாக பேசியபோது,  அவர் என் எண்ணங்களை புரிந்துகொண்டு ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு காட்சியுடன் நீங்கள் மனதில் நினைத்து வைத்திருக்கும் ஒரு காட்சியை எப்படி ஒப்பிட முடியும் அதனால் நீங்கள் நினைத்தபடி விரும்பிய கிளைமாக்ஸ் காட்சியை எடுங்கள் என ஒப்புக்கொண்டார்.

அந்த காட்சியை படமாக்கி முடித்த பின்புதான் அனைவரும் அதை பார்த்து வியந்து பாராட்டினார்கள். அந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்து விட்டு என்னுடைய குருநாதர் பாரதிராஜா வியந்து போய் என்னைப் பாராட்டினார். அப்படி ஒரு நல்ல விஷயம் வரவேண்டும் என்பதற்காக பிடிவாதமாக இருப்பது தவறில்லை. 

அதேபோல யாருமே முழுதாக சினிமாவை கற்றுக்கொண்டு உள்ளே நுழைவதில்லை. பல விஷயங்களை இங்கே தான் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும். இந்தி படப்பிடிப்பின் போதும் எனக்கு பல விஷயங்கள் புரியாமலேயே அந்த சமயத்தில் அங்கே தான் கற்றுக் கொண்டு அந்த படத்தை முடித்தேன். அதுபோல இந்த படத்தின் இயக்குனர் சிவ மாதவ்வும் இந்த படத்தை தான் நினைத்தபடி மிக நேர்த்தியாக பிடிவாதமாக இருந்து செதுக்கி உள்ளார். அந்த வகையில் நிச்சயம் இந்த படம் அனைவராலும் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” என்று கூறினார்.

Most Popular

Recent Comments