மலையாளத்தில் மிக பிரமாண்ட வரலாற்று படமாக வெளியான மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் என்கிற படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரியதர்ஷன் ஆந்தாலஜி படங்களில் ஒன்றாக உருவாகியுள்ள ஒலவும் தீரவும் என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதிலும் மோகன்லால் தான் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் துவங்கியுள்ளார் பிரியதர்ஷன். படத்திற்கு கொரோனா பேப்பர்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தனது போர் பிரேம்ஸ் நிறுவனம் சார்பாக அவரே தயாரிக்கிறார்.
படத்தில் கதாநாயகியாக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் காயத்ரி நடிக்கிறார். இந்த வருடத்தில் மாமனிதன், விக்ரம், மலையாளத்தில் வெளியான என்ன தான் கேஸ் கொடு என்கிற தொடர் வெற்றிப்படங்களில் நடித்த காயத்ரிக்கு தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது ஜாக்பாட் என்று சொல்லலாம்.
இதில் முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் சித்திக் நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகர்களாக மலையாள சினிமாவின் இளம் நடிகர்களான ஷேன் நிகம் மற்றும் ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் நடிக்கின்றனர்
இதில் ஷைன் டாம் சாக்கோ விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஷேன் நிகம் விக்ரமின் கோப்ரா படத்தில் நடிக்க இருந்து சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.