இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியாக ஒரு நடிகராக திரையுலகில் அறிமுகமானவர் கிருஷ்ணா. அதைத்தொடர்ந்து கழுகு படத்தின் மூலம் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு தயாரிப்பாளராக மாறி ஜான்சி என்கிற வெப் தொடரை தயாரித்துள்ளார் கிருஷ்ணா. இதில் ஜான்சி கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சலி நடித்துள்ளார்

இதை இயக்குனர் திரு இயக்கியுள்ளார். தொடர்ந்து விஷாலை வைத்து அடுத்தடுத்த படங்களை இயக்கி வந்த திரு இதன்மூலம் முதன்முறையாக வெப் தொடர் இயக்கத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

மேலும் இந்த வெப் தொடர் 10 எபிசோடுகள் ஆக உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் தொடரை இயக்க இயக்குனர் திரு தயக்கம் காட்டினாலும், அதன் கதையால் ஈர்க்கப்பட்டு இதனை இயக்கியுள்ளார். இந்த தொடரின் கதையை எழுத்தாளர் கணேஷ் கார்த்திக் எழுதியுள்ளார். இயலாமை கொண்ட ஒரு பெண்ணின் கோபம் தான் இந்த கதை என்று அவரே கூறியுள்ளார்.

இந்த தொடர் இயக்கியது பற்றி இயக்குனர் திரு கூறும்போது, ‘நடிகர் கிருஷ்ணாவை ஒரு நடிகராக இயக்கிய அவருடன் வேலை பார்ப்பேன் என்று நினைத்தேன். ஆனால் அவர் தயாரிப்பாளராக இருக்கும் ஒரு படைப்பில் இயக்குனராக வேலை பார்த்திருக்கிறேன் என்றால் அது ஆச்சரியமான நிகழ்வுதான்” என்று கூறினார்.