கன்னட சினிமாவில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவராஜ்குமார். மறைந்த கன்னட திரையுலக ஜாம்பவான் நடிகர் ராஜ்குமாரின் வாரிசான இவர் கன்னட படங்களில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய கொள்கையை சற்றே தளர்த்தி தமிழ் படங்களிலும் நடிக்க தற்போது ஆர்வமாகி வருகிறார். அந்தவகையில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் இவர் இணைந்து நடிக்க இருப்பதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இன்னும் அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை அதேபோல தனுஷ், அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்திலும் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இந்த தகவலும் படக்குழுவினரால் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இதையும் தானே ஒரு பேட்டியில் கூறியுள்ளார் சிவராஜ்குமார்.

மேலும் தனுஷ் பற்றி அவர் கூறும்போது தனுஷிடமுள்ள குறும்புத்தனம், அவர் தனது நண்பர்களிடம் பழகும் விதம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பார்க்கும்போது என்னையே நான் தனுஷில் பார்ப்பது போன்று இருக்கிறது. நான் தான் தனுஷ்.. தனுஷ் தான் நான்.. என்று சொன்னால் சரியாக இருக்கும். அவருடன் தமிழ் சினிமாவில் இணைந்து நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை நான் மிஸ் பண்ண விரும்பவில்லை” என்று கூறியுள்ளார் சிவராஜ்குமார்.

இதே சிவராஜ்குமார் நடித்து கடந்த 2015ல் கன்னடத்தில் வெளியான வஜ்ரகயா என்கிற படத்தில் ஒரு பாடலை நட்புக்காக தனுஷ் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.