மைனா, கும்கி, காடன் என கிராமத்து மனிதர்கள் சார்ந்த கதைகளையும் காடு சார்ந்த களங்களையும் மையமாக வைத்து வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் பிரபுசாலமன். முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கி வந்த பிரபு சாலமன், தற்போது நடிகை கோவை சரளா கதையின் நாயகியாக நடித்துள்ள செம்பி என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் அஸ்வின் குமார், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. குறிப்பாக நடிகர் கமல், கோவை சரளாவை தனது வீட்டிற்கே அழைத்து நடிப்பு ராட்சசி என பாராட்டினார்.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற இருக்கிறது என அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது மட்டுமல்ல இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோவை சரளாவை பொறுத்தவரை சதிலீலாவதி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றவர். பெரும்பாலும் கமலின் ஆஸ்தான நடிகர்கள் வட்டாரத்தில் கோவைசரளாவிற்கும் ஒரு இடம் உண்டு. அந்த நட்பின் அடிப்படையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் கலந்து கொள்கிறார் என்று தெரிகிறது.