தமிழ் சினிமாவை பொருத்தவரை கடந்த முப்பது வருடங்களாக வரலாற்று படங்களை எடுக்க தயங்கியதற்கு காரணம், அதற்கு மிக பிரம்மாண்டமான பட்ஜெட் செலவாகும் என்பதும் அவ்வளவு பணம் செலவழித்து போட்ட முதலீட்டை எடுப்பது மிக சிரமம் என்பதும் முக்கிய காரணமாக இருந்து வந்தது.
கமலின் மருதநாயகம் படம் கூட துவங்கப்பட்டு அப்படியே நிறுத்தப்பட்டதற்கும் இதுதான் காரணம். ஆனால் கடந்த சில வருடங்களாக குறிப்பாக ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் வெளியானதிலிருந்து வரலாற்று பாடங்களை மொழி பேதமில்லாமல் தென்னிந்திய மொழிகள் தாண்டி பாலிவுட்டிலும் ரிலீஸ் செய்யலாம் என்கிற ஒரு புதிய ட்ரெண்ட் உருவானது.
இதன் மூலம் ஒரே செலவில் எடுக்கப்பட்ட படம் பல மொழிகளில் வெளியாகி படத்திற்காக செலவழிக்கப்பட்ட தொகையை விட நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தான், இயக்குனர் மணிரத்னம் தனது நீண்ட நாள் கனவான, தமிழக ரசிகர்களின் கனவான பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக உருவாக்கி அதன் முதல் பாகத்தை கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியிட்டார்.
ரசிகர்களும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்து மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் மாற்றியுள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த படம் 450 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல் நடித்த விக்ரம் படத்தின் சாதனையை சமீபத்தில்தான் தாண்டிய இந்தப்படம் விரைவில் 500 கோடி ரூபாய் என்கிற சாதனை வசூல் இலக்கையும் தொட்டுவிடும் என சினிமா வியாபார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இது தமிழ் சினிமாவில் இன்னும் பிரமாண்ட படங்களை எடுப்பதற்கான உற்சாகத்தை படைப்பாளிகளுக்கு அளித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.