இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்தார். கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் ரஜிஷா விஜயன், ராசி கண்ணா மற்றும் லைலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழுவினர் நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாகவே ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நடைபெறும் முக்கிய படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அந்தப்படத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத, அதேசமயம் இயக்குனர், தயாரிப்பாளர் அல்லது படத்தின் ஹீரோவுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் பிரபல நட்சத்திரங்கள் பலர் நட்புக்காக கலந்துகொண்டு படத்தை ரசிகர்கள் மத்தியில் புரமோட் பண்ணுவதை தொடர்ந்து பார்க்க முடிகிறது.

அந்த வகையில் தெலுங்கில் வெளியாக இருக்கும் சர்தார் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா. இவர் இதில் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம் கார்த்தி தான்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவான தோழா திரைப்படத்தில் கார்த்தியும் நாகார்ஜுனாவும் இணைந்து நடித்து இருந்தனர். இந்த படம் அப்போது மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

நாகார்ஜூனாவிற்கு தமிழில் ஏற்பட்டிருந்த இடைவெளியை சரிசெய்து ரசிகர்களிடம் வரவேபையும் பெற்று தந்தது. அந்த நட்புக்காக சர்தார் பட புரமோஷன் விழாவில் கலந்து கொண்டார் நாகர்ஜுனா..