இயக்குனர் சீனுராமசாமி, விஜய்சேதுபதியை வைத்து தென்மேற்கு பருவக்காற்று என்கிற ஹிட் படத்தைக் கொடுத்தார். அதன்பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் நீர்ப்பறவை என்கிற படத்தையும் இயக்கி அந்த படம் மிகுந்த வரவேற்பையும் பெற்றது. அதை தொடர்ந்து இந்த இரண்டு ஹீரோக்களையும் ஒரே படத்தில் ஒன்றிணைத்து இடம் பொருள் ஏவல் என்கிற படத்தை இயக்கினார் சீனுராமசாமி.
ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நந்திதா இருவரும் கதாநாயகிகளாக நடித்த இந்தப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்திருந்தது. ஆனால் அந்த நிறுவனத்தின் சில பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இடம் பொருள் ஏவல் திரைப்படம் சில முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் உரிய நேரத்தில் திரையிட முடியாமல் போனது.
இப்படியே எட்டு வருடங்கள் ஓடி விட்ட நிலையில் தற்போது இந்தப் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது என்கிற ஒரு மகிழ்ச்சியான தகவலை இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல இந்தப் படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது தம்பி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தப்படம் வெளியானால் நிச்சயம் ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்பலாம்.