நடிகை சமந்தாவை பொறுத்தவரை பான் இந்திய நடிகையாக மாறிய பின்பு பெரும்பாலும் ஹீரோக்களுடன் டூயட் பாடும் கதாபாத்திரங்களை குறைத்துக்கொண்டு கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
அந்த வகையில் தெலுங்கில் அவர் தற்போது யசோதா மற்றும் சாகுந்தலம் என இரண்டு படங்களில் கதையின் நாயகியாக வலுவான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படம் வரும் நவம்பர் 11ஆம் தேதி வெளியாக உள்ளது என்கிற அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இந்த படத்தை இரட்டை இயக்குனர்களான ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இயக்கியுள்ளனர். படத்தின் தலைப்பான யசோதா புராண காலத்து பெயர் போல தோன்றினாலும் இப்போதுள்ள காலத்திற்கு ஏற்ற ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இந்தப்படம் இருக்கும். புதிர் மற்றும் உணர்ச்சிமயமான கதையமைப்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கொண்டு பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், இந்தப் படம் குறித்து ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் இருக்கை நுனியில் அமரும்படியான கதையமைப்பைக் கொண்டது. என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்.
இந்த படத்தில் சமந்தாவுடன் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா ஷர்மா மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த கதைக்காகவும் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் சமந்தா அவரது இரத்தமும் வியர்வையும் கொடுத்து உழைத்திருக்கிறார் என பாராட்டுகின்றனர் யசோதா படக்குழுவினர்.