V4UMEDIA
HomeNewsKollywoodஇதிகாச படம் இயக்க தயாராகிறார் சசிகுமார்

இதிகாச படம் இயக்க தயாராகிறார் சசிகுமார்

சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் ஒரு இயக்குனராகவும் சிறந்த நடிகராகவும் ஒரே சமயத்தில் அறிமுகமானவர் சசிகுமார். அதேசமயம் அவருக்கு ஒரு பக்கம் படம் இயக்கும் வாய்ப்பு தேடி வந்தாலும் கூட, காலம் அவரை முழுநேர நடிகராகவே மாற்றிவிட்டது.

இருந்தாலும் சுப்ரமணியபுரம் படத்திற்குப் பிறகு ஈசன் என்கிற படத்தை இயக்கிய சசிகுமார், தொடர்ந்து தயாரிப்பாளராகவும் மாரி பசங்க என்கிற படத்தை தயாரித்து அந்தப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றார்.

தொடர்ந்து கிராமத்து பின்னணி கதையம்சம் கொண்ட படங்களில் மண்மனம் மாறாத கதாநாயகனாக நடித்து வருகிறார் சசிகுமார். சுப்பிரமணியபுரம் போன்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர், மீண்டும் எப்போது படம் இயக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் அவர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக, தான் மீண்டும் டைரக்ஷனில் இறங்க இருப்பதாக தெரிவித்துள்ளார் சசிகுமார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “எனது போராட்டம் மற்றும் வலி உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனாலே நான் திரைப்படங்களில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெற்றேன். வாழ்வில் எதுவும் நிரந்தரம் அல்ல! எல்லாம் மாறும்! அதனை நான் இப்போது புரிந்து கொண்டேன் பக்குவம் மற்றும் நிதானம் தான் மிகவும் முக்கியமானது. ஓடிக்கொண்டே இருப்பது வாழ்க்கை அல்ல. நிதானமாக பிடித்தவற்றை செய்வது மிகவும் முக்கியமானது”, என்று சசிகுமார் கூறினார்.

மேலும் அவர், தான் விரைவில் ஒரு இதிகாச படம் இயக்கவிருப்பதாகவும், அந்தப் படத்திற்கான திரைக்கதையை ‘ஈசன்’ திரைப்படம் வெளியானதற்கு பின்பு எழுதி முடித்ததாகவும் தெரிவித்தார்.

“இப்பொழுது வெளிவந்த பொன்னியின் செல்வன் மற்றும் பாகுபலிக்கு முன்னரே இந்தத் திரைப்படத்திற்கான பணி தொடங்கியது. ஆனால் படத்தின் செலவு மிகவும் அதிகமாக இருந்ததால், அந்தக் காலகட்டத்தில் இந்த திரைப்படத்தினை எடுக்க முடியவில்லை. ஆனால் விரைவில் இந்த படத்தினை இயக்குவேன்”, என்றும் அவர் தெரிவித்தார்.

மதுரையில் தங்கியிருப்பதை பற்றி பத்திரிகையாளர் கேள்வி எழுப்புகையில் அவர் கூறியதாவது, “மதுரை எனது சொந்த ஊர். நான் எனது குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறேன். மேலும் எனது திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் மதுரையை சார்ந்த பகுதிகளில் நடைபெறுகிறது. அங்கு தங்கி இருப்பது மிகவும் எளிதாக உள்ளது.

இங்கே ஒரு டப்பிங் ஸ்டூடியோ இருப்பதனால், என் கிராமத்தில் தங்கி வேலை செய்வது எனக்கு மிகவும்  சவுகரியமாக உள்ளது. எனவே சென்னைக்கு வரவேண்டிய கட்டாயம் இருந்தால் மட்டுமே நான் வருவேன்”, என்று கூறினார்.

Most Popular

Recent Comments