மலையாள சினிமாவில் மிகச்சிறந்த நடிகராக கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்திருப்பவர் நடிகர் பிரித்விராஜ். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்த பிரித்விராஜ், அதைத்தொடர்ந்து பாலிவுட்டிலும் கால் பதித்து மூன்று படங்களில் நடித்துவிட்டார்.
இதற்கிடையே மோகன்லாலை வைத்து லூசிபர் மற்றும் புரோ டாடி ஆகிய இரண்டு படங்களை இயக்கி மிகப்பெரிய வெற்றியையும் கொடுத்து ஒரு கமர்சியல் இயக்குனராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு உள்ளார்.
மேலும் கமர்சியல் படங்களில் கனகச்சிதமான பாத்திரத்தில் ஆக்சன் ஹீரோவாக பொருந்திப்போகும் அதே சமயத்தில் குணசித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க பிரித்விராஜ் தயங்குவதில்லை.
அந்த வகையில் தற்போது பிரபாஸ், ஸ் ருதிஹாசன் நடிப்பில், கேஜிஎப் பட புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் உருவாகி வரும் சலார் என்கிற திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பிரித்விராஜ்.
நேற்று பிரித்விராஜின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் அவரது பிறந்தநாள் பரிசாக பிரித்விராஜ் நடிக்கும் கதாபாத்திரம் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரித்விராஜ். இந்த கதாபாத்திரம் கதையின் நாயகனான பிரபாஸுக்கு இணையான கதாபாத்திரமாக படத்தில் இடம்பெற்றிருக்கிறது.
பிரித்விராஜின் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் பிரசாந்த் நீல் பேசுகையில், ” பிரித்விராஜ் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர், ‘சலார்’ படத்தில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான வேறு நடிகரை நாங்கள் பெற்றிருக்க இயலாது.
படத்தில் அவர் வரதராஜ மன்னார் கதாபாத்திரத்தில் பொருத்திக்கொண்டு நடித்த விதம், அவரது அற்புதமான நடிப்புத் திறமையை நிரூபிக்கிறது. அவரது தனித்துவமான நடிப்பு, ரசிகர்களை பெரிதும் ஈர்க்கும். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் பிரித்விராஜ், பிரபாஸுடன் இணைந்து நடித்திருப்பதும், இவ்விருவரையும் இயக்கியதும் அற்புதமான அனுபவம்” என்றார்.