இரும்புத்திரை என்கிற படத்தை இயக்கி அந்தப்படத்தில் சாமானியர்களின் வங்கி கணக்கு எப்படி மோசடி கும்பலால் ஆன்லைன் மூலம் கொள்ளை அடிக்கப்படுகிறது என்கிற பதைபதைப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருந்தார் இயக்குனர் பிஎஸ் மித்ரன். விஷாலுக்கு திருப்புமுனையாக அமைந்த அந்தப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய ஹீரோ திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.

இந்த நிலையில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள சர்கார் படத்தை இயக்கியுள்ளார் பிஎஸ்.மித்ரன். வரும் அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளி வெளியீடாக இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த படம் குறித்து படத்தின் நாயகன் கார்த்தி தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

அப்போது படம் பற்றி அவர் பேசும்போது, “என்னுடைய கேரியரில் இது மிகவும் முக்கியமான படம். இந்த படத்தில் வயதான தோற்றத்தில் முதன்முறையாக நடிப்பதால் அதற்காக நிறைய மெனக்கெட்டு உள்ளோம்.

நம் இந்திய உளவாளியாக நம் மண்ணில் இருக்கும் ஒருவன், அவன் எப்படி சிந்திப்பான்.. எதற்காக உளவாளியாக மாறுகிறான் என்பது எனக்கு பிடித்திருந்தது.
இந்த படம் ஒரு மிகப்பெரிய விஷயத்தை பேசுகிறது. உளவாளி படம் என்பதால் ஜேம்ஸ்பாண்ட் படம் மாதிரி பிகினி, சிக்ஸ்பேக் இருக்குமா என்று கேட்காதீர்கள். இது இந்தியன் ஸ்பை த்ரில்லராக இருக்கும். அனைவரும் குடும்பத்தோடு வந்து பார்க்கலாம்.

இந்த தீபாவளிக்கு சர்தார் மற்றும் சிவாவின் பிரின்ஸ் திரைப்படமும் இணைந்து வருகின்றன. இந்த இரண்டு படங்களும் வெவ்வேறு விதமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் வருகின்றன. இரண்டையும் பார்த்து ஆதரவு கொடுக்கவேண்டும்” என கார்த்தி கேட்டுக்கொண்டார்.