கன்னடத்தில் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் ‘காந்தாரா’ திரைப்படம், இந்த வாரம் முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.
1847ஆம் ஆண்டில் கன்னட பிரதேசத்தில் உள்ள அரசர் நிம்மதியைத் தேடி காட்டுக்குள் செல்கிறார். அங்கு வசிக்கும் மக்கள் இணைந்து கடவுளை வழிபடுவதைப் பார்த்து, அவர்களுக்கு பெரிய அளவில் நிலங்களை எழுதிக் கொடுக்கிறார். இதற்குப் பிறகு 1970களில் அந்த அரசனின் வழிவந்த ஒருவன், அந்த நிலங்களை மீட்க நினைக்கிறான்.
ஆனால், அங்கிருக்கும் தெய்வம் எச்சரிக்க, அவன் இறந்து போகிறான். இதற்குப் பிறகு, 1990ல் பண்ணையார் ஒருவர் அதே நிலத்தை அந்த மக்களிடமிருந்து பறிக்க நினைக்கிறார். மற்றொரு பக்கம், காப்புக் காடுகளை அளந்து மக்களை வெளியேற்றப்போவதாகக் கூறுகிறது வனத்துறை. அந்த மக்கள் வணங்கும் தெய்வம் என்ன செய்தது என்பது படத்தின் மீதிக் கதை.
நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தில் இணைத்து திரைக்கதை எழுதியிருக்கும் விதம் சுவாரஸ்யத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது.
முதல் பாதியில் ‘கம்பளா’ எனப்படும் எருமை மாட்டு போட்டி, அதையொட்டி சேற்றில் நடக்கும் சண்டைக்காட்சிகள் என காட்சி விருந்தாக பார்வையாளர்களை கவருகிறது படம்.
மற்றொருபுறம் யதார்த்ததுக்கு நெருக்கமான வாழ்விடங்கள், பழங்குடியின மக்களின் பண்பாட்டு கலாசாரம், வேட்டை தொழில் உள்ளிட்டவை கவனம் பெறுகின்றன.
அப்பா, மகன் என இரு வேடங்களிலும், பூதகோல நடனம் ஆடும் காட்சிகளிலும் ரிஷப் ஷெட்டி, தான் ஒரு ஆகச் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். பாசம், ரொமான்ஸ், காமெடி என கமர்ஷியல் ரசிகர்களையும் தனது இயக்கத்தால் கவர்ந்துள்ளார் ரிஷப் ஷெட்டி.
பொன்னியின் செல்வன் படத்தில் ரவிதாசனாக நடித்திருந்த கிஷோர் காந்தாரா படத்தில் வன அதிகாரியாக வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ஆதிக்குடி மக்களை விரட்டியடிக்க வரும் அவரது கதாபாத்திரம் கடைசி வரை நீங்க நல்லவரா? கெட்டவரா? என கெஸ் பண்ண முடியாத ரீதியிலே அமைக்கப்பட்டு இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்.
சாமி ஆடும் காட்சிகளில் எல்லாம் ஹாரர் படம் பார்க்கும் எஃபெக்ட்டை இசையமைப்பாளர் அஜனீஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ் காஷ்யப் கொடுத்துள்ளது படத்தை வேறு தளத்திற்கே கொண்டு சென்றுவிட்டது.
ஆதிக்குடிகளின் வாழ்க்கையை சில ஆதயத்திற்காக மாற்ற அரசு ஏன் முயற்சிக்க வேண்டும்? அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் உரிமை எந்த அரசுக்கும் இல்லை என ஆணித்தரமாக வசனங்கள் மூலமும் காட்சிகள் மூலமாகவும் கிளைமேக்ஸில் நாயகன் ரிஷப் ஷெட்டி நடித்துள்ள விதம் தான் அனைவரையும் படத்தை பார்க்க தூண்டுகிறது.
நிச்சயம் தியேட்டருக்கு சென்று காந்தாரா படத்தை பார்த்து வியக்கலாம்.