அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 169வது படமாக உருவாகும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக இந்த படத்தை இயக்கி வருகிறார்.

பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடைபெற்றால் அதில் நடைமுறை சிக்கல்கள் நிறைய இருக்கும் என்பதால் ஆந்திராவில் மற்றும் வெளிமாநிலங்களில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் முக்கிய காட்சி சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நடைபெற்று வருகிறது.

இங்கே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வருகை தந்ததும், கேரவனில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை சந்தித்ததும், பின்னர் படப்பிடிப்பு முடிவடைந்தது காரில் கிளம்பும் போது ரசிகர்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கையசைத்து விடைபெற்றுச் சென்றதும் என சோசியல் மீடியாவில் பல வீடியோக்கள் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன.

தமிழ்நாட்டில் அதுவும் தங்களது சொந்த ஊரில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதை கடலூர் மற்றும் சிதம்பரம் பகுதியை சேர்ந்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.