அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் மிக பிரமாண்டமாக படமாக்கி அதன் முதல் பாகமும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
கதையைப் படிக்கும்போது ஒரு வித கோணத்தில் கதையை நகர்த்தி சென்றிருப்பார் கதாசிரியர் கல்கி. அதேசமயம் பொன்னியின் செல்வன் திரைப்படமாக மாறியபின் அதை ரசிகர்களுக்கு எளிய முறையில் சொல்ல வேண்டும் என்பதற்காக திரைக்கதையில் சில மாற்றங்களை மணிரத்னம் செய்துள்ளார் என்பது ஏற்கனவே அவர் மூலமாகவே சொல்லப்பட்ட விஷயம் தான்.
அதேசமயம் பொதுவாக சினிமாக்களில் இரண்டு மூன்று கதாநாயகர்கள் நாயகிகள் இருந்தால் அவர்களுக்கு என அறிமுகக் காட்சிகள் வைக்கப்படுவது வழக்கம். இந்த படத்திலும் முதலில் அப்படித்தான் ஒவ்வொருவருக்குமான அறிமுக காட்சிகளை வைத்து அவர்களை அறிமுகப்படுத்திவிட்டு கதையை நகர்த்துவதற்கு திட்டமிட்டு ஒன்லைன் ஆர்டர் போட்டு இருந்தாராம் மணிரத்னம்.
ஆனால் படத்தொகுப்பு செய்யும்போது திடீரென தான் எடுத்த காட்சிகளைப் பார்த்த மணிரத்தினம் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் அறிமுக காட்சிகளை வரிசையாக வைத்தால் அது போரடிக்கும் விதமாக இருக்கும் என நினைத்தாராம்.
அதனால், ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு மட்டும் அறிமுக காட்சியை வைத்துவிட்டு மற்ற கதாபாத்திரங்களை வழக்கம்போல கதையின் போக்கில் அறிமுகப்படுத்தும் விதமாக மாற்றிவிட்டார் என்று பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் தெரிவித்துள்ளார்.