பொதுவாக தென்னிந்திய திரையுலகை பொறுத்தவரை தெலுங்கு திரையுலகில் மாஸ் அண்ட் ஆக்சன் படங்களையும் தமிழ் சினிமாவில் கமர்சியல் பொழுதுபோக்கு படங்களையும் மலையாள சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உணர்வுபூர்வமான படங்களையும் கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்
அதே சமயம் கடந்த சில வருடங்களாக இந்த பட்டியலில் கன்னட சினிமாவிற்கு என இந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாமல் இருந்து வந்தது. அவ்வப்போது அத்தி பூத்தாற்போல சில படங்கள் கவனம் ஈர்க்கும் விதமாக வெளியாகின.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான கேஜிஎப் திரைப்படம் கன்னட சினிமாவின் தலையெழுத்தையே மாற்றியது. சமீபத்தில் வெளியான அதன் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று கன்னட சினிமாவை தென்னிந்திய சினிமாக்களில் மற்ற திரையுலகங்களுக்கு இணையாக கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
இதனால் தமிழ் தெலுங்கு ரசிகர்களின் பார்வையும் கன்னட திரையுலகம் பக்கம் தற்போது திரும்பியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியாகியுள்ள காந்தாரா திரைப்படமும் மிக வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
இந்த படம் வெளியான பின்னர் இந்த படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் இதைப் பாராட்டி வருகின்றனர். உடனடியாக இந்த படத்தின் தமிழ், மலையாளம், தெலுங்கு டப்பிங் உரிமைகள் நல்ல விலைக்கு விற்கப்பட்டன,
இந்த படம் தற்போது தமிழில் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் விதமாக தயாராகியுள்ளது. நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கலாம்