தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து விஜய்யை வைத்தே ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி, அதற்கடுத்த புரோமோஷனாக தற்போது பாலிவுட் சென்று அங்கே முன்னணி ஹீரோவான ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். விஜய்சேதுபதி, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கடந்த ஒரு மாதமாக இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வந்தது.
இந்த படப்பிடிப்பின் போதுதான் அட்லியின் பிறந்தநாளுக்கு விஜய் நேரிலேயே சென்று வாழ்த்து தெரிவித்தார். அது குறித்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆனது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ஜவான் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஷாருக்கான் மும்பை கிளம்பி சென்றுள்ளார்.
சென்னையில் பணியாற்றிய அனுபவம் குறித்து அவர் கூறும்போது, “கடந்த முப்பது நாட்களும் எப்படி போனது என்றே தெரியவில்லை. தலைவர் எங்களது படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்ததால் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நயன்தாராவுடன் இணைந்து படம் பார்த்தது , அணிருத்துடன் விவாதித்தது, விஜய், விஜய்சேதுபதி ஆகியோருடன் சந்திப்பு என 30 நாட்களும் மகிழ்ச்சியுடன் கடந்து சென்றது” என்று கூறியுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் அட்லி கூறும்போது, “நீங்கள் இங்கே இத்தனை நாட்கள் இருந்தது எங்களுக்கு மகிழ்ச்சியும் பெருமையும் தரும் விஷயம். குறிப்பாக எனது திரையுலக பயணத்தில் மறக்க முடியாத நினைவுகளை கொடுத்துள்ளீர்கள். நீங்கள் இங்கே இருந்த நாட்களில் ஆயிரம் குடும்பங்கள் உங்களால் பயனடைந்துள்ளனர். ராஜா எப்போதுமே ராஜா தான். தலைவணங்குகிறேன் உங்களுக்கு.. மீண்டும் மும்பையில் சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.