மலையாளத்தில் குறிப்பிடத்தக்க படங்களை இயக்கி பிரபலமான இயக்குனராக இருப்பவர் ரெஜிஷ் மிதிலா. இவர்தான் நடிகர் விஜய்சேதுபதியை முதன்முதலாக மலையாளத்தில் அறிமுகப்படுத்தி மார்கோனி மத்தாய் என்ற படத்தை இயக்கியவர். இந்தநிலையில் தற்போது யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் யானை முகத்தான் என்கிற படம் மூலம் தமிழிலும் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார்.

இந்த படத்தில் நடித்த ரமேஷ் திலக், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் ரெஜிஷ் மிதிலா டைரக்சனில் ரமேஷ் திலக் நடித்தபோது தான் உருவாக்கி வைத்திருந்த ஒரு கதையை அவரிடம் ஏதேச்சையாக கூறிய சமயத்தில் இதற்கு பொருத்தமான நபராக யோகிபாபு இருப்பார் என கூறியுள்ளார் ரமேஷ் திலக்.

அதன்பிறகு யோகிபாபுவை சந்தித்து தனது கதையின் மூலம் ஈர்த்த ரெஜிஷ் மிதிலா இப்போது யானை முகத்தான் என்கிற படத்தை யோகிபாபுவை வைத்து இயக்கியும் முடித்துவிட்டார். இதில் விநாயக கடவுளை கும்பிடும் அவரது தீவிர பக்தனாக ரமேஷ் திலக்குடன் நடித்துள்ளார். விநாயகன் என்கிற பெயரிலேயே பூமிக்கு வரும் விநாயக கடவுளாக யோகிபாபு நடித்துள்ளார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் துவங்கி சென்னை வரை நடத்தியுள்ளார்கள். இந்தப்படத்தினால் ஈர்க்கப்பட்டு மகிழ்ச்சியான யோகிபாபு இந்த படம் முடிந்ததுமே நமது அடுத்த படத்தை எப்போது ஆரம்பிக்கலாம் என ரெஜிஷ் மிதிலாவிடம் கேட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார். அந்த அளவிற்கு யானை முகத்தான் படம் மிக சிறப்பாக வந்துள்ளதாம்.

அப்படி யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் கதை சிரபுஞ்சி மற்றும் மேகாலயாவின் நடக்கும் விதமாக உருவாக இருக்கிறதாம்.

இதுபற்றி ரஜேஷ் மிதிலா கூறும்போது, “நாட்டில் நடக்கிற அத்துமீறல்களை, மனிதர்களின் குற்றத்தை அழகா கோபப்படாமல் பேண்டஸியில் கதையாக சொல்லலாம். குழந்தைகள் வரைக்கும் போய் மனசில் நிற்கணும். உணர்வுபூர்வமான விஷயங்களையும் வெச்சிருக்கோம். ஒரு காட்சியில் நடிக்கும் போது ஒருத்தர் மட்டுமே டாமினேட் பண்ணனும்னு நினைச்சுட்டால் அவர் மட்டுமே ரீச் ஆவாங்க. இன்னொருத்தர்கிட்டே பார்வை போகாது. அப்படி இல்லாமல் எல்லோரையும் பின்பற்றி பேசி யோகி பாபு நடிக்கிறது தான் அழகு. நல்ல பரந்த சினிமா அறிவு இப்ப ரசிகர்கள்கிட்டே வந்திருக்கு. அப்படிப் பட்டவங்களை நம்பித்தான் இந்த யானை முகத்தானை எடுத்திருக்கிறேன்” என்கிறார்.