அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்கிற ஐந்து பாகங்களை கொண்ட நாவலை லட்சக்கணக்கானோர் படித்து தங்களுக்குள்ளேயே ஒரு திரைப்படமாக அதை உருவகப்படுத்திக் கொண்டு இருப்பார்கள். எம்ஜிஆர் காலம் தொட்டு, அதற்கு அடுத்து வந்த கமல்ஹாசன் முதல் பலரும் இந்த நாவலை திரைப்படமாக்க முயற்சி செய்து பல காரணங்களால் அந்த முயற்சியை கைவிட நேர்ந்தது. இந்த நிலையில் மணிரத்னம் இந்த நாவலை இரண்டு பாகங்களாக திரைப்படமாக்கி அதன் முதல் பாகத்தை சமீபத்தில் வெளியிட்டு சாதித்து கட்டியுள்ளார்.
இந்தக் கதையின் மாந்தர்களாக பார்த்து பார்த்து தேர்வு செய்து நட்சத்திரங்கள் அனைவரும் சோடை போகாது நடிப்பை வழங்கி படத்தை மிகச்சிறப்பாகக் கொண்டு வந்துள்ளனர். படம் பார்த்த பெரும்பாலானோரும் இந்த படத்தை, இதில் நடித்த நடிகர்களின் நடிப்பை, காட்சி அமைப்புகளை என மனம் விட்டு பாராட்டி வருகின்றனர்.
அதேசமயம் ஒரு சிலர் எல்லாவற்றிலும் ஏதாவது குற்றம் கண்டுபிடிக்கும் மனப்போக்கில் சில விமர்சனங்களை வேண்டுமென்றே முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கேலாம் பதிலடி கொடுக்கும் விதமாக திமுக எம்.பி திருச்சி சிவா, பொன்னியின் செல்வன் படம் குறித்து தனது பாராட்டுக்களை மனம் திறந்து பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, “நான் கல்லூரி காலத்திலும் மிசா போராட்ட காலத்தில் சிறையில் இருந்தபோதும் படித்து மகிழ்ந்த நாவல் பொன்னியின் செல்வன். எம்ஜிஆர், கமல் ஆகியோர்கள் காலகட்டத்தில் முயற்சித்தும் முடியாமல் போனதை இப்போது மணிரத்தினம் சாதித்துள்ளார். இந்த நாவல் திரைப்படமாக மாறுமா என்கிற எண்ணம் நிலவிய சமயத்தில் இந்த காவியத்தை திரைப்படம் ஆக்கிய மணிரத்னத்தை பாராட்டுவதை ஒரு தமிழனின் கடமையாக நான் உணர்கிறேன்.
100% முழுமை என்பது எல்லாவற்றிலும் எதிர்பார்க்க முடியாது. பெரும்பாலும் எழுத்து வடிவத்தில் பெரும் வரவேற்பினை பெற்ற பல கதைகள் திரையில் வெற்றி பெறாமல் போயிருக்கின்றன. விமர்சனங்களை சந்திக்காத தலைவர்களும் படைப்புகளும் இருக்கவே முடியாது. ஆனால் பாராட்ட வேண்டியதை பாராட்டாமல் குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டுவதை ஏற்க இயலாது.
இந்தப் படத்தில் நடித்த அனைவருமே மிகப் பொருத்தமான தேர்வாக அமைந்துள்ளனர் பலபேரின் பலநாள் ஏக்கத்தினை போக்க முன்வந்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கும் இயக்குனர் மணிரத்தினத்தின் இந்த முயற்சியை என் போன்ற உணர்வு கொண்டோரின் சார்பாக பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார் திருச்சி எம்பி சிவா.